கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோரனஅள்ளி பூமலை உச்சியில் காணப்படும் நாமஜூனை என்ற இடத்தில், மோரனஅள்ளியைச் சேர்ந்த ஆட்டுக்கார கண்ணன் என்பவர் அளித்த தகவலின் பேரில், பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பாறை ஓவியத்தை கண்டறிந்தனர்.
இவர்கள் அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், மாவட்ட அரசு அருங்காட்சியகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த பாறை ஓவியம் குறித்து, தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சில மனித, விலங்கு உருவங்களைக் கொண்ட பாறை ஓவியங்கள் அதிகளவில் உள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகளைக் கொண்ட பாறை ஓவியங்கள் பெரியகோட்டப்பள்ளி, மலையாண்டள்ளி அடுத்த ஆண்டிமலை ஆகிய இரண்டு இடங்களில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. தற்போது புதிதாய் கண்டறியப்பட்டுள்ள பூமலை நாமஜூனை பாறை ஓவியம் இவ்வரிசையில் மூன்றாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில், 350க்கும் மேற்பட்ட குறியீடுகளும், மனித விலங்கு ஒவியங்களும், 10 அடி நீளம் 8 அடி அகலம் கொண்ட இயற்கை குகையின் விதானத்தில் வெண்சாந்தினால் வரையப்பட்டுள்ளன. கீழே வற்றாத சுனை உள்ளது.
இவ்வோவியத் தொகுப்பின் மையத்தில், நெற்றியில் ஒரு திரிசூல வடிவிலான பெண் தெய்வமும், அதன் இரு பக்கமும் வீரர்கள் இத்தெய்வத்தை நோக்கி இருப்பவர்களாக காட்டப்பட்டுள்ளனர்.
இது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பாதீடு என்பதன் காட்சியாகும். பாதீடு என்பது வீரர்கள் வேட்டையின் போது கிடைத்த விலங்குகளை, ஒரு தெய்வத்தன்மை வாய்ந்த பெண், குழுவினர் அனைவருக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுக்கும் நிகழ்வாகும்.
தெழ்வத்தன்மை வாய்ந்த இப்பெண்ணை, கொடிச்சி என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அடுத்ததாக இவ்வோவியத் தொகுப்பில் பல பாண்டில் விளக்கு ஓவியங்கள் காணப்படுகின்றன. பாண்டில் விளக்கு என்பது இறந்தவர்களின் ஆன்மாவை குறிப்பதாகும்.
இறந்தோரை விளக்கு வடிவத்தில் இன்றும் வழிபடும் பழக்கம் உள்ளது. நீர் நிலைகளில் இறந்தோரை வழிபடும் பழக்கமும் உள்ளது. நீர் நிலைகளில் இறந்தோரை வழிபடும் பழக்கமும் உள்ளது. பல இடங்களில் சுனைக்கருகே பாண்டில் விளக்குகள் ஓவியங்களாகவும், பாறை கீறல்களாகவும் இம்மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பாறை ஓவியத் தொகுப்பில் வரையப்பட்டுள்ள சதுரத்துக்குள் மனிதன், வட்டத்துக்குள் மனிதன் ஆகியவை இறந்தோர் அடக்கம் செய்யப்பட்ட, கல் திட்டைகள் மற்றும் கல் வட்டங்களைக் குறிக்கின்றன. தேர் போன்ற அமைப்பினுள் ஒரு மனிதனைக் காட்டியிருப்பது தேர்ப் பாடையைக் குறிக்கிறது.
அது இறந்த வீரன் சொர்க்கத்துக்கு செல்வதன் அடையாளமாகும். இவ்வோவியங்களோடு வில்லேந்திய வீரன், விலங்கின்மீது மனிதர்கள் போன்றவைகளும், இரண்டு மயில்களும் வரையப்பட்டுள்ளன. இவை தவிர பிற ஓவியங்கள், கோலங்களும் குறியிடுகளுமாகும். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்தை தமிழி என்கிறோம். இவ்வெழுக்துக்கள் எப்படி தோன்றியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த ஓவியத்தில் காணப்படும் குறியீடுகள் போன்று, அகழாய்வில் கிடைக்கும் பானை ஓடுகள் மற்றும் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன. இத்தகைய குறியீடுகளில் இருந்தே, தமிழி எழுத்துகள் தோன்றியிருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. எனவே, அந்த ஆண்டுகளுக்கும் இப்பாறை ஓவியக் குறியீடுகள் உதவும் என்பதில் ஐயமில்லை.
எனவே 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால தமிழ் மக்களின் பண்பாட்டுக் கூறுகளை, இப்பாறை ஓவியத் தொகுப்பு பதிவு செய்துள்ளது. இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வில், தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ், வரலாற்று குழு தலைவர் நாராயணமூர்த்தி, செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் விஜயகுமார் மற்றும் இக்குழுவைச் சேர்ந்த லசிமாபேகம், டெய்சிராணி, பாரத், மோரனஅள்ளி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


