Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தருவோம்: எடப்பாடி உறுதி

ராமநாதபுரம்: கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று ராமநாதபுரம் சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் பிரசாரப் பயணமாக வந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் அரண்மனைக்கு சென்றார்.  சமீபத்தில் அதிமுகவில் இணைந்த சேதுபதி மன்னர் குடும்பத்தை சேர்ந்த முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி மற்றும் அவரது தாயார் லட்சுமி நாச்சியாரை சந்தித்து பேசினார்.

முன்னதாக மறைந்த ராஜா குமரன் சேதுபதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து சேதுபதி சமஸ்தான முறைப்படி விருந்தினரை அழைத்து பேசக் கூடிய இடமான அரண்மனை தர்பார் மண்டபத்தில் அமர்ந்து பேசினார். பின்னர், அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க பழங்கால கலைநய பொருட்கள், மூலிகை ஓவியங்கள், பழங்கால தொல்லியல் பொருட்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்புற சங்க மீனவர்கள், விவசாய சங்கங்கள், நெசவாளர் சங்கம், ஆடு வளர்ப்போர் சங்கம், வாகன ஓட்டுனர் சங்கம், வழக்கறிஞர் சங்கம், பகுதி நேர ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, அவர்களது குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றார்.

அப்போது எடப்பாடி பேசும்போது, ‘‘கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் சரி செய்யப்படும். அதிமுக ஆட்சி அமைந்த உடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவை மீட்கவும், தமிழக நலன், மாநில கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்படும்’’ என்றார்.

* கூட்டம் இல்லாததால் ரோடு ஷோ ரத்து

எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் மாலை 4.30 மணிக்கு பேசுவதாக இருந்தார். அப்போது ரோமன் சர்ச் முதல் அரண்மனை வரை ரோடு ஷோ நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் குறைவாக இருந்ததால் ரோடு ஷோ நடத்தாமல், சாலையோரங்களில் நின்றிருந்தவர்களை பார்த்து கை அசைத்தபடி சென்றார்.

பின்னர் அரண்மனை முன்பு எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அதிமுகவுக்கு தெரிந்த ஒரே ஜாதி ஆண் ஜாதி, பெண் ஜாதி தான். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றார்.

* முதுகுளத்தூரா, முக்குலத்தோரா?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘எனக்கு விவசாய தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது’’ என்றார். அப்போது ஒருவித பதட்டத்துடன் இருந்தார். வழக்கமாக பேசி முடித்ததும் கூட்டத்தினரை பார்த்து நன்றி சொல்லும் எடப்பாடி, பேச்சின் துவக்கத்திலேயே பணிவாக வணக்கம் தெரிவித்து பேசத் தொடங்கினார்.

முதுகுளத்தூர் என்பதற்கு பதிலாக முக்குலத்தோர் என தடுமாறினார். மேலும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியும், எடப்பாடியுடன் பிரசார பஸ்ஸில், வேட்பாளர் போல் இரு கைகளை உயர்த்தி காட்டி கும்பிட்டபடி நின்றார். இதை கவனித்த எடப்பாடி, மலேசியா பாண்டி கையை பிடித்து கீழே இழுத்து, சாதாரணமாக நிற்குமாறு கூறினார்.