Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஷ்மீரில் 3வது நாளாக நீடிக்கும் வேட்டை; 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: ராணுவ வீரர் ஒருவர் காயம்

காஷ்மீர்: காஷ்மீரின் குல்காம் வனப்பகுதியில் மூன்றாவது நாளாக நீடிக்கும் தேடுதல் வேட்டையில், இதுவரை 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். பஹல்காம் பகுதியில் 26 அப்பாவி மக்களைக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்’ பொறுப்பேற்றிருந்தது. அந்தத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர் தீவிரவாதிகளை, நகரின் டாச்சிகாம் பகுதி அருகே பாதுகாப்புப் படையினர் ‘ஆபரேஷன் மகாதேவ்’ மூலம் கொன்றனர்.

அதற்கு அடுத்த நாளே, ‘ஆபரேஷன் சிவசக்தி’ என்ற பெயரில் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதல் வேட்டையில் மேலும் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் 22 தாக்குதலுக்குப் பிறகு, இதுவரை சுமார் 20 முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மே 6 மற்றும் 7 தேதிகளில் பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகால் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அப்பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

அப்போது, வனப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதால், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. நேற்று நடைபெற்ற தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று நீடித்த இருதரப்பு மோதலில் மேலும் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்மூலம், கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டுப் படையினர், உயர் தொழில்நுட்ப கண்காணிப்புக் கருவிகளின் உதவியுடன் இந்தத் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.