ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டான். மேலும் தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கடந்த 9ம் தேதி கத்ராவில் பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில்,9 பேர் பலியாயினர்.41 பேர் படுகாயமடைந்தனர். அதை தொடர்ந்து 11ம் தேதி சட்டர்கல்லாவில் துணை ராணுவ செக்போஸ்டின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். அடுத்தடுத்து நடந்த தாக்குதல்களில் 1 பாதுகாப்பு படை வீரர் பலியானார்.7 வீரர்கள் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த நிலையில்,பண்டிபோரா மாவட்டம்,அரகம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினருக்கு உளவுதுறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் போலீசாருடன் இணைந்து ராணுவமும் தேடுதல் வேட்டை நடத்தியது. இதில், ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டான். அந்த இடத்தில் ஒரு தீவிரவாதியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிலர் ஒளிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீவிரவாத சம்பவங்களை தொடர்ந்து முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் நேற்று காஷ்மீர் வந்தார். நக்ரோட்டாவில் பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தில் உயர் ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, கடந்த 9ம் தேதி கத்ராவில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு குழுவிடம்(என்ஐஏ) ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்படைத்துள்ளது.