Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கர்நாடக எல்லையில் கனமழை பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: வனவிலங்குகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

மேட்டூர்: தமிழக-கர்நாடக எல்லையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே காவிரியின் துணை நதியான பாலாறு ஓடுகிறது. பாலாறு இரு மாநிலங்களின் எல்லைக்கோடாக உள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளும், மயில்கள், நீர் காகங்கள், காட்டுக்கோழிகள் உள்ளிட்ட பறவைகளும் அதிக அளவில் உள்ளன. வனவிலங்களுக்கும், பறவைகளும் நீர்தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக பாலாறு இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பாலாறு வறண்டு மணல் மேடாக காட்சியளித்தது. வனவிலங்குகளும், பறவைகளும் தண்ணீர் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டன.

தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் புகுந்த மான்கள், நாய்களிடம் கடிபட்டும், வேட்டைக்காரர்களிடம் சிக்கியும் உயிரிழந்து வந்தன. யானைகள் கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழக - கர்நாடக எல்லை வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த பாலாற்றில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செந்நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன்பாக பாலாற்றை கடந்து கால்நடை மேய்க்க சென்றவர்கள். மறுகரையில் இருந்து பாலாறு கிராமத்திற்கு வரமுடியாமல் போனது. வனப்பகுதியிலேயே தங்கிவிட்டனர்.

அதேபோல் கர்நாடக வனப்பகுதியில் இருந்து, தமிழக வனப்பகுதிக்கு வந்த மான்களும், யானைகளும் நீரின் வேகம் குறைந்த பிறகு, பாலாற்றில் இறங்கி கரை சேர்ந்தன. பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பல மாதங்களுக்கு பிறகு, மீண்டும் பாலாற்றில் தண்ணீர் ஓடத்தொடங்கியது. இதனால் வனவிலங்குகளின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.