கர்நாடகா: கர்நாடகா மாநிலம் ஹாவேரி பகுதியில் காய்கறி வியாபாரிக்கு ரூ.29 லட்சம் GST விதிக்கப்பட்டுள்ளது அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பணத் தேவைகள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் யுபிஐ செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் ஹாவேரி பகுதியில் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மைதானத்திற்கு அருகில் ஒரு சிறிய காய்கறி கடை நடத்தி வருபவர் சங்கர்கௌடா ஹடிமணி. இவருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், ’கடந்த நான்கு ஆண்டுகளில் 1.63 கோடிக்கு பரிவர்த்தனை செய்துள்ளதாகவும், அதற்காக ரூ. 29 லட்சம் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி நோட்டீஸ் சங்கர்கௌடாவுக்கு பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில், நான் காய்கறிகளை விற்பனை செய்கிறேன். இப்போதெல்லாம் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்து வருவதில்லை. யுபிஐ முறையைத்தான் பயன்படுத்துகின்றனர். நான் ஒவ்வோர் ஆண்டும் உடனடியாக வருமான வரி தாக்கல் செய்து விடுகிறேன். அதற்கான பதிவுகள் என்னிடத்தில் உள்ளது. ஆயினும், GST அதிகாரிகள் ரூ.29 லட்சம் வரி கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை நான் எப்படி செலுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம் புதிய காய்கறிகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.