Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

கன்னியாகுமரி: இன்று கோடை விடுமுறையின் கடைசி நாளையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சீசன் காலத்தை தவிர்த்து சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்களிலும் மக்கள் கூட்டத்தை காண முடிகிறது. இந்தநிலையில் கோடை விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நாளை ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.அதையொட்டி கோடை விடுமுறையின் கடைசி நாள், வார விடுமுறை நாள் என்பதால் இன்று அதிகாலை முதலே கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. காலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக திரிவேணி சங்கம கடற்கரையில் திரண்டனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக குமரியில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஒரு வார காலமாக சூரிய உதயம் தெரியவில்லை. இன்றும் கன்னியாகுமரியில் மழை இல்லை என்றாலும் காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இதனால் சூரிய உதயம் தெரியாததால் கடற்கரையில் கூடியிருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் இன்று காற்று குறைந்து குளிர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் பகவதி அம்மன் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து கடலில் செல்வதற்காக டிக்கெட் எடுக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் திரண்டனர். தொடர்ந்து டிக்கெட் பெற்று கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலைக்கு சென்றனர். சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு காரணமாக கன்னியாகுமரி போலீசார் கடற்கரை, ரதவீதி, விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.