Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,398 மையங்களின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்: அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,398 வாக்குச்சாவடி மையங்களின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,398 வாக்குச்சாவடி மையங்களில் இடம் மாற்றம், பெயர் மாற்றம், புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கு ஏதுவாக வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அலுவலர்களுக்கான முன்னேற்பாடு கூட்டம் மற்றும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடுதல் நிகழ்ச்சி நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் காஞ்சிபுரம் கலெக்டரால் வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்வதற்கு முன்பாக, தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் நேரடியாக களப்பணி செய்து, வாக்குச்சாவடி மையங்களை உறுதி செய்தல் வேண்டும். அவ்வாறு களப்பணி செய்யும்போது அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி மற்றும் கட்டிட உறுதி தன்மை உள்ளதை உறுதிசெய்திட அறிவுறுத்தப்பட்டது.

ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடி மையங்கள் ஏதேனும் பழுதடைந்த நிலையிலோ அல்லது பழமையான கட்டிடமாக இருக்கும் பட்சத்தில், அருகாமையில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளி கட்டிடம், மிக ஆபத்தான கட்டிடம், அரசு கட்டிடங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் கருத்துக்கள் பெற்று முன்மொழிவுகள் அனுப்பி வைக்க வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் கோரப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளும், 1500க்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள பாகங்களை இரண்டு பாகங்களாக பிரித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து வாக்குச்சாவடிகளும் இருபாலர்களுக்கான வாக்குச்சாவடிகளாக இருப்பதை உறுதிசெய்திட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் எழாத வண்ணம், வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்து, முன்மொழிவுகள் அனுப்பிட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் நல் ஒத்துழைப்பு நல்கிட கோரப்பட்டுள்ளது. மேலும், வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடம் மாற்றம், பெயர் மாற்றம், புதிய வாக்குச்சாவடி அமைத்தல் பணியானது, 100 சதவீதம் தூய்மையாகவும், இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் முடித்திட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஜெயசித்ரா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.