Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற, ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில், பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்பட்டு வருகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 2023ம் ஆண்டு, ஜூன் மாதம் பாலாலயத்துடன் ரூ.29 கோடி மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் தொடங்கியது.

தொடர்ந்து, கடந்த 4ம் தேதி அனுக்ஞை விக்னேசுவர பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. நேற்று மாலை 8ம் கால பூஜை மிக சிறப்பாக தொடங்கி நடந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் யாக சாலையிலிருந்து புனித நீரை வேத விற்பன்னர்கள் எடுத்து சென்று ராஜகோபுர மற்றும் மூலவர் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திரர் ஆகியோர் முன்னிலையில் இந்த கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தன. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் எம்விஎம்.வேல்மோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெகநாதன், எஸ்எல்எஸ்.விஜயகுமார், இணை ஆணையர் சி.குமரதுரை, உதவி ஆணையர்கள் கார்த்திகேயன், லட்சுமிகாந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் விழா குழுவினரும் கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்கரசி நேர்முக வர்ணனை செய்தார். மேலும், காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத சுவாமிகள், தர்மபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுமதி, மகாலட்சுமி சுப்பிரமணியம், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனாம்பாள், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா, எழிலரசன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடி, ஆர்.கே.தேவேந்திரன், பிரகாஷ் சில்க்ஸ் உரிமையாளர்கள் பிரகாஷ், கணேஷ் ஈஸ்வர், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர்கள் சுந்தர்கணேஷ், பிரபு (எ) பச்சையப்பன், ராஜம் செட்டி ஜுவல்லரி உரிமையாளர் உதயகுமார், வராகிலட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் கோபிநாத், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்.பி கே.சண்முகம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.