Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சி விவகாரம் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கு சம்மன்: நாளை முதல் ஒருநபர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் விஷ சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 68 பேர் உயிரிழந்தனர். அதில் சிகிச்சையில் குணமடைந்து 161 பேர் நலமுடன் வீடு திரும்பினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் பிரபல சாராய வியாபாரிகள் உள்பட 24 பேர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 161 நபர்கள் மற்றும் உயிரிழந்த 68 நபர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 229 குடும்பத்தினர்களிடம் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணையம் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் முதன்முதலாக கடந்த 3.7.2024ம் தேதி முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை தொடங்கி நடத்தினார்.

கடந்த 9ம் தேதி வரை மொத்தம் 150 பேர்களிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை முடிந்தது. விசாரணைக்கு ஆஜராகாத 11 பேர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப கள்ளக்குறிச்சி போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 68 குடும்பத்தினர்களிடம் விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக உயிரிழந்த 40 பேர்களின் குடும்பத்தினர்களுக்கு கள்ளக்குறிச்சி காவல்துறை மூலமாக விசாரணைக்கு ஆஜராக வேண்டி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து நாளை 12ம்தேதி முதல் விசாரணை தொடங்குகிறது. நாள் ஒன்றுக்கு தலா 10 பேர்கள் வீதம் 40 பேர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. அதாவது 12ம்தேதி, 13ம் தேதி மற்றும் 16, 17 தேதிகளில் தொடர்ந்து 4 நாட்களுக்கு விசாரணை நடைபெற உள்ளதாக ஒருநபர் ஆணையம் அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.