Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மலிவான அரசியல் செய்கிறது அதிமுக: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தண்டையார்பேட்டை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக மலிவான அரசியலை செய்கிறது, என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செல்வப் பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வை ஒருபோதும் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அதற்கு பின் வந்தவர்கள் நீட் தேர்வை அனுமதித்தார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தை பொருத்தவரை யாரோ ஒருவர் செய்த தவறுக்காக அரசையோ, முதல்வரையோ பொறுப்பேற்க வேண்டும் என கூறுவது தவறு. கள்ளக்குறிச்சி விவகாரத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி வாய்மூடி மவுனியாக இல்லை. எந்தெந்த இடங்களில் எதிர்க்க வேண்டுமோ அந்தந்த இடங்கள் எல்லாம் எதிர்க்கிறோம். கூட்டணி கட்சியைப் போல நாங்கள் செயல்படவில்லை.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக மலிவான அரசியலை செய்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும். தமிழிசை சவுந்தரராஜன் நீட் தேர்வை எழுதி தான் மருத்துவர் ஆனாரா, நீட் தேர்வு எழுதாமலேயே அவரும், அவரது கணவரும் சிறந்த மருத்துவராக திகழவில்லையா. இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், இலக்கிய அணி தலைவர் புத்தன், நிர்வாகிகள் மயிலை தரணி, சூளை ராஜேந்திரன், மா.வே.மலையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் நன்றி கூறினார்.