Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 40,000 பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணைகள்: ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 40,000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள பயனாளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ஆணைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குடிசை இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில், கலைஞர் கனவு இல்லம் என்ற முதல்வரின் தொலைநோக்கு திட்டத்தை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியிட்டார். அறிவிப்பை தொடர்ந்து, இதற்கான அரசாணை மற்றும் வழிகாட்டுதல் விவரங்கள் வெளியாகின.

2024-25ம் நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் 360 சதுரஅடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும். இதில் 300 சதுரஅடி கான்கிரீட் (ஆர்சிசி) கூரையுடனும், எஞ்சிய 60 சதுரஅடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக, பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள்.

புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இதில் வீடு கட்ட முடியாது. சொந்தமாக கான்கிரீட் வீடு இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது. பயனாளிகளுக்கான தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்படி ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கீட்டு தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அதில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் தேர்வை ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. பயனாளிகள் பட்டியல் கிராம சபை கூட்டத்தில் வைத்து ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் மூலம் 40,000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள பயனாளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ஆணைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.