நெல்லை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் நெல்லையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(58). இவர் முர்தீன் ஜஹான் தைக்கா பரம்பரை முத்தவல்லியாக இருந்து வந்தார். இவருக்கு அஜினீஸ் நிஷா என்ற மனைவியும் இஸிர் ரஹ்மான் என்ற மகனும் மொஸிசா பியாஸ் என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். ஜாகிர் உசேன் பிஜிலி இன்று அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகேயுள்ள சாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். டவுன் காஜா பீடி அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜாகிர் உசேன் துடிதுடித்து இறந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட வாலிபருக்கும், ஜாகிர்உசேன் பிஜிலிக்கும் 30 சென்ட் வக்பு இடம் தொடர்பான பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் தீண்டாமை சட்டத்தின் கீழ் ஜாஹிர் உசேன் பிஜிலி கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமீனில் வெளியே இருந்து வந்துள்ளார்.
மேலும் வக்பு சொத்து தொடர்பான முழு புள்ளி விவரங்களையும் இவர் சேகரித்து வந்தது அந்த வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜாகீர் உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து நெல்லை டவுன், பேட்டை பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொலையான ஜாஹீர் உசேன் பிஜிலி ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளராவார். இவர் 25 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மேயர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது அவரது தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.