Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடமலைக்குண்டுவில் கோயிலுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட முள்வேலி அகற்றம்

Kadamalaikundu, Templeவருசநாடு : கடமலைக்குண்டுவில் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் எதிரொலியால் ஈஸ்வரன் கோயில் பாதையில் அமைக்கப்பட்ட முள்வேலி அகற்றபட்டது. கடமலைக்குண்டு கிராமத்தில், மூல வைகையாற்றின் கரையோரம் பாண்டியர் கால ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தேனி பிரதான சாலையில் இருந்து பாதை செல்கிறது. இந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடமலைக்குண்டுவை சேர்ந்த தனிநபர் கோயிலுக்கு செல்லும் பாதையை முள்வேலி மூலம் அடைத்தார்.

இதுகுறித்து கிராம மக்கள், சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர், கோயிலுக்கு செல்லும் பாதை தனது பட்டா நிலத்தில் வருவதாகவும், அதனால் முள்வேலியை அகற்ற முடியாது எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து கிராம கமிட்டியினர் கடமலைக்குண்டு காவல்நிலையம், தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும் இது தொடர்பாக, கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் ஆண்டிபட்டி தாசில்தார் தலைமையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து, நேற்று கடமலைக்குண்டுவில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. மேலும், பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் திரண்டு தேனி பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கிராம பொதுமக்களுடன் மீண்டும் ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர்கள் முஜிபுர் ரகுமான், ராஜசேகர், மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் பரசுராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோயிலுக்கு செல்லக்கூடிய முள்வேலியை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.