நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியானார் நீதிபதி ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்: ஜனாதிபதி உத்தரவு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த எஸ்.வி.கங்காபுர்வால் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஆணை பிறப்பித்தார். இதேபோல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவையும் ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
உச்ச நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆர்.மகாதேவன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2013ல் பதவியேற்றார். சிவில், ரிட் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், 1996 முதல் 2001 வரையிலும், 2007 முதல் 2012 வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். இந்த காலகட்டத்தில் 18,000 வழக்குகளில் அவர் ஆஜராகியுள்ளார். கடந்த 2013ல் அவர் நீதிபதியாக பதவியேற்றதிலிருந்து சுமார் 96 ஆயிரம் வழக்குகளை விசாரித்துள்ளார். தமிழ் ஆர்வம் மிக்கவராகவும், இலக்கிய பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கி வருபவர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி ஆர்.மகாதேவனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் நேற்று பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நீதிபதியை வாழ்த்திப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், மூத்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுப்பிரமணியன், எம்.சுந்தர் உள்ளிட்ட நீதிபதிகள், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், ஆர்.நீலகண்டன் உள்ளிட்டோரும், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லூயிசாள் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நன்றி கூறி நீதிபதி மகாதேவன் பேசுகையில், ‘‘நீதிபதி பயணத்தின் 10 ஆண்டுகளில் நான் எவரையும் புண்படுத்தியதில்லை. இதை பதவி என்று நினைக்காமல் எனக்கான பணி என்று நினைத்து பயணத்தை தொடர்கிறேன் ’’என்றார்.


