Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜூன் 12 மற்றும் 16ம் தேதிகளில் மேட்டூர், கல்லணையை முதல்வர் திறந்து வைக்கிறார்: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: ஜூன் 12 மற்றும் 16ம் தேதிகளில் மேட்டூர், கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேட்டூர் அணை நீரைக்கொண்டு தமிழகத்தின் 12 மாவட்டங்களும், காரைக்கால் பகுதியும் பயனடைகின்றன. இந்நீரை நம்பி இம்மாவட்டங்களில் மொத்தம் சுமார் 20 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. 12 மாவட்டங்களிலும் சாகுபடி நிலங்கள் சமவெளி பரப்பு என்பதால் வேறு அணைக்கட்டுகள் எதுவும் இன்றி மேட்டூர் அணை நீரை நம்பியே உள்ளது.

இம்மாவட்டங்களில் பயிர் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 28ம் தேதி மூடப்படுவது வழக்கம். தற்போது அணையில் நூறு அடிக்கும் மேல் நீர்மட்டம் உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து வழக்கமான நாளில் அதாவது வரும் 12ம் தேதி டெல்டா மாவட்டங்களின் நெல் சாகுபடிக்காக திறக்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட உள்ளார்.

இதையடுத்து விவசாயிகள் சாகுபடி முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விதைப்புக்கு நாற்றங்கால் தயார் செய்யும் பணி, இயற்கை எரு உரம் இடும்பணி, உழவு பணி ஆகியவைகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பம்புசெட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் தற்போது முன்பட்ட குறுவை பருவத்தில் இதுவரை சுமார் 85000 ஏக்கர் பரப்பில் நெல் நடவு பணி முடிவடைந்துள்ளது.

அதில் 20000 ஏக்கரில் இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 10,000 ஏக்கரில் நாற்று விடப்பட்டுள்ளது. நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான விதை நெல் ரகங்கள் 211 மெட்ரிக் டன் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26ம் ஆண்டில் ‘‘குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்” செயல்படுத்தப்படவுள்ளது. இயந்திர நடவு பணி மேற்கொள்ளும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ. 4000 வீதம் வழங்கப்பட உள்ளது. இயந்திர நடவு செய்யவுள்ள விவசாயிகள் உழவன் செயலியில் முன் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரி உரம், நுண்நூட்ட சத்துக்கள் மற்றும் விதைகள் 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக முதல்வர் வரும் 15ம் தேதி தஞ்சை வருகையின்போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் வரும் 15ம் தேதி இரவு கல்லணை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 16ம் தேதி காலை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்நிலையில், அன்றைய தினம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் நிலையில் கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, கல்லணையில் இருந்து தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து விடுவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என தெரிவித்தனர்.