Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜுலை 17ஆம் நாள் தியாகிகள் தினம்; தமிழ்நாடு அரசின் சார்பில், தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்கள்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசின் சார்பில், ஜுலை திங்கள் 17ஆம் நாள் தியாகிகள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அமைச்சர் பெருமக்கள், தியாகிகளின் தினத்தை முன்னிட்டு, 17.7.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகி ஆர்யா (எ) பாஷ்யம். தியாகி சங்கரலிங்கனார். தியாகி செண்பகராமன் ஆகியோர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற தியாகிகளின் தியாக வரலாற்றை நினைவுகூரும் வகையில், சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் 2.10.1998 அன்று தியாகிகள் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் தியாகிகளைப் போற்றும் வகையில் 17.7.1999 அன்று தியாகி ஆர்யா (எ) பாஷ்யம். தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளையும், 17.7.2008 அன்று தியாகி செண்பகராமன் அவர்களின் திருவுருவச் சிலையினையும் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தார்கள்.

தியாகி ஆர்யா (எ) பாஷ்யம் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளத்தில். 1907 ஆம் ஆண்டு பிறந்து, மன்னார்குடியில் பள்ளிப்படிப்பையும் திருச்சி நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தார். இவர் இளம் வயதிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார். நீடாமங்கலத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி அவர்களின் சொற்பொழிவைக் கேட்டு, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தவும் தன்னை தயார்படுத்திக் கொண்டார். நீடாமங்கலத்தில் நடைபெற்ற "சைமனே திரும்பிப் போ" என்ற போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தில் நள்ளிரவு நேரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த இராணுவ வீரர்கள் எவருக்கும் தெரியாமல் ஏறி பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கி விட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம் ஆவார்.

தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் உள்ள மண்மலைமேடு கிராமத்தில் பெரிய கருப்பசாமி வள்ளியம்மை தம்பதியினருக்கு 1895 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். 1914 ஆம் ஆண்டு பெண்கள் சமுதாய வளர்ச்சிக்கான சங்கத்தின் செயலாளராகவும். கதர் வளர்ச்சிக்கான பணியையும் மேற்கொண்டார். 1917 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

1920 ஆம் ஆண்டு மூதறிஞர் இராஜாஜி அவர்களைச் சந்தித்து அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார். சுதந்திரத்திற்குப் பின் மொழிவழி மாநிலங்கள் அமைந்தபோது சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி 'தமிழ்நாடு' எனப் பெயரிட வேண்டுமெனக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 79 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, தமது 58ஆவது வயதில் உயிர் துறந்தார்.

தியாகி செண்பகராமன் திருவனந்தபுரத்தில் 15.9.1891 அன்று பிறந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். தாய்நாட்டை வணங்கி 'ஜெய்ஹிந்த்' எனும் முழக்கத்தை முதன்முதல் எழுப்பியவர் தியாகி செண்பகராமன் . நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு முன்னோடியாக இருந்த இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவரும் தியாகி செண்பகராமன்தான். அவர் 26.5.1934 அன்று இயற்கை எய்தினார். இந்திய நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு இன்னுயிர் நீத்த விடுதலைப் போராட்டத் தியாகிகள் சங்கரலிங்கனார். ஆர்யா (எ) பாஷ்யம், செண்பகராமன் ஆகியோரின் மாபெரும் தியாகங்களைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 17.7.2025 அன்று காலை 9.30 மணியளவில் கிண்டி காந்திமண்டப வளாகத்தில் நடைபெறும் தியாகிகள் தின நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், மேயர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பிக்கிறார்கள்.