ஓரிரு நாளில் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் பிஎப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுகிறது: ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுடெல்லி: பிஎப் கணக்கில் நடப்பாண்டிற்கான 8.25 சதவீத வட்டி வரவு வைக்கும் பணிகள் இந்த வாரத்தில் முழுமையாக முடிக்கப்படும் என ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டுக்கான (2024-25) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக அங்கீகரித்து ஒன்றிய அரசு கடந்த மே 22ம் தேதி ஒப்புதல் அளித்தது. ஒன்றிய அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து வட்டித் தொகை ஒவ்வொரு ஊழியர்களின் பிஎப் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
இது குறித்து ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அளித்த பேட்டியில், ‘‘ கடந்த ஜூன் 6ம் தேதி வருடாந்திர கணக்கு புதுப்பிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு, 33.56 கோடி உறுப்பினர் கணக்குகளை கொண்ட 13.88 லட்சம் நிறுவனங்களுக்கு வருடாந்திர கணக்கு புதுப்பித்தல் செய்யப்பட வேண்டியிருந்தது. அவற்றில், 13.86 லட்சம் நிறுவனங்களின் 32.39 கோடி உறுப்பினர் கணக்குகளில் வட்டி வரவு வைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் வட்டி வரவு வைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்படும்’’ என்றார்.


