Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜேஇஇ தேர்வில் வெற்றி ஆட்டோ டிரைவர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்: நான் முதல்வன் திட்டத்தால் கிடைத்ததாக பெருமிதம்

ராஜபாளையம்: அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் படித்த ஆட்டோ ஓட்டுநரின் மகன், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இலவச பயிற்சி பெற்று ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சந்திரபோஸ். இவரது மனைவி சுமதி. 100 நாள் வேலை திட்ட பணியாளர். இவர்களது 3வது மகன் பார்த்தசாரதி(18).

சுந்தரராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு 12ம் வகுப்பு முடித்துள்ளார். அங்குள்ள ஆசிரியர்களின் ஆலோசனையின் பேரில், ஜேஇஇ மெயின்ஸ் நுழைவு தேர்வுக்கு பள்ளியில் இருந்தபடியே ஆன்லைனில் படித்து 67 சதவீதம் பெற்று தேர்ச்சி அடைந்தார். இதனைத்தொடர்ந்து ேஜஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு பயில சென்னை சென்ற இவருக்கு தமிழக அரசு கை கொடுத்தது. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பயிற்சி மையத்தில் 2 மாதங்கள் தங்கி இலவசமாக பயிற்சி எடுத்துள்ளார்.

பயிற்சிக்குப் பிறகு கடந்த மே 26ம் தேதி நடைபெற்ற ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதியுள்ளார். தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியான நிலையில், 112 மதிப்பெண்களுடன் இந்திய அளவில் பார்த்தசாரதி 740வது இடம் பிடித்து தேர்ச்சி அடைந்துள்ளார். தற்போது அம்மாணவருக்கு சென்னை ஐஐடியில் விண்வெளி துறை தொடர்பான படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2 அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்களில், முதன்முதலில் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐஐடியில் பயிலும் முதல் மாணவர் பார்த்தசாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாணவர் பார்த்தசாரதி கூறுகையில், ‘‘எனக்கு சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் படிக்க சீட் கிடைத்துள்ளதற்கு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் பேருதவியாக இருந்தது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி. நீட் தேர்வை விட ஜேஇஇ தேர்வு எளிமையானதுதான். தமிழக அரசின் பயிற்சி மையங்களில் சேர்ந்து, கவனித்து படித்தால் கட்டாயம் வெல்லலாம்’’ என்றார்.