சென்னை: அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரின் 9ம் ஆண்டுநினைவு நாளான நேற்று (வெள்ளி) காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திறந்த மேடையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதிமுக தலைவர்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து முன்னாள் அதிமுக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், கு.பா.கிருஷ்ணன் மற்றும் பலருடன் ஜெயலலிதா சமாதிக்கு ஊர்வலமாக வந்து மலர்அஞ்சலி செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர்களை தொடர்ந்து, டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

