டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டிகள், டோக்கியோ நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் (28), அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் (26) மோதினர். போட்டி துவங்கியது முதல் இரு வீராங்கனைகளும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளாய் சீறிப் பாய்ந்து அபாரமாக ஆடினர். கடும் சவாலாக அமைந்த முதல் செட் டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் பென்சிக் கைப்பற்றினார். இருப்பினும் 2வது செட்டில் சுதாரித்து ஆடிய கெனின் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடந்த 3வது செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய பென்சிக் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா (20), கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா (26) மோதவிருந்தனர். போட்டி துவங்கும் முன், காயம் காரணமாக எலெனா விலகியதால், நோஸ்கோவா வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் பென்சிக் - நோஸ்கோவா மோதவுள்ளனர்.
ஜூனியர் பேட்மின்டன்; இறுதியில் லக்சயா: ஆசிய யு17 மற்றும் யு15 ஜூனியர் பேட்மின்டன் போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகின்றன. மகளிருக்கான யு17 ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லக்சயா ராஜேஷ், ஜப்பான் வீராங்கனை ரியா ஹகாவை, 21-15, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்திய வீராங்கனை தீக்சா சுதாகர், சீன தைபேவின் யுன் சியாவோவை, 21-8, 21-17 என்ற நேர் செட் கணக்கில் 27 நிமிடங்களில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து, இறுதிப் போட்டியில் லக்சயா-தீக்சா மோதவுள்ளனர்.
பாரா பேட்மின்டன் பிரமோத்துக்கு 2 தங்கம்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் ஆஸ்திரேலியன் பாரா பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளின் கடைசி கட்டமாக, ஒற்றையர் இறுதிப் போட்டியில் சக இந்திய வீரர் மனோஜ் சர்க்காருடன், பிரமோத் பகத் மோதினார். அற்புதமாக ஆடிய அவர், 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் பிரமோத் பகத், சுகந்த் கதம் இணை, சக இந்திய இணை உமேஷ் விக்ரம் குமார், சூர்யகாந்த் யாதவ் இணையுடன் இறுதிப் போட்டியில் மோதினர். இந்த போட்டியில் 21-11, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் பிரமோத்-சுகந்த் இணை வென்று தங்கத்தை கைப்பற்றியது.
யூகி பாம்ப்ரி இணை தோல்வி: வியன்னா ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் நேற்று, இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் ஆண்ட்ரே கொரான்சன் இணையை, 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில், போர்ச்சுகலின் பிரான்சிஸ்கோ கேப்ரல், ஆஸ்திரியாவின் லூகாஸ் மெட்லர் இணை வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
கொச்சி கால்பந்து; மெஸ்ஸி ஆப்சென்ட்: அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து அணியும், அந்நாட்டை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும் வரும் நவ.17ம் தேதி கேரளாவின் கொச்சி நகருக்கு வருகை தந்து, நட்பு ரீதியிலான ஒரு போட்டியில் ஆடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் ஸ்பான்சரான ஆன்டோ அகஸ்டின் தனது பேஸ்புக் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கேரளாவின் கொச்சியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, வரும் நவ.17ம் தேதி நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் பங்கேற்காது’ என கூறியுள்ளார். அதற்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.


