பாடி ஸ்ட்ராங்கு... பேஸ்மென்ட் வீக்கு... 128 ரன்னில் பதுங்கிய ஜப்பான் இமாலய வெற்றி பெற்ற இந்தியா: அண்டர் 19 ஒரு நாள் கிரிக்கெட்
சார்ஜா: ஆசிய கோப்பைக்கான, 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று, ஜப்பான் அணியை 211 ரன் வித்தியாசத்தில் இந்தியா அமர்க்களமாக வென்றது. சார்ஜாவில் ஆசிய கோப்பைக்கான, 19 வயதுக்கு உட்பட்டோர் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜப்பான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தினர். துவக்க வீரர் வைபவ் மாத்ரே 29 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் முகம்மது அமான் அற்புதமாக பேட்டிங் செய்து பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்க செய்தார். 118 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகளுடன் 122 ரன் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
மற்றொரு வீரர் கார்த்திகேயா 49 பந்தில் 57 ரன் எடுத்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா, 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. ஜப்பானின் கீபெர் யமமோட்டோ லகே 2, ஹியுகோ கெல்லி 2, சார்லஸ் ஹின்ஸே, ஆரவ் திவாரி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஜப்பானின் துவக்க வீரராக களமிறங்கிய ஹியுகோ கெல்லி நிதானமாக ஆடி 111 பந்துகளில் 50 ரன் எடுத்து அவுட்டானார். சார்லஸ் ஹின்ஸே 68 பந்தில் 35 ரன் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 50 ஓவர் இறுதியில் ஜப்பான் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 211 ரன் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக இந்திய அணி கேப்டன் முகம்மது அமான் அறிவிக்கப்பட்டார்.


