Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 9% உயர்வு: 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு

டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 9% உயர்ந்துள்ளது. இது 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரிப்பாகும். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இதனால், எண்ணெய் விநியோகம் தடைபடும் என்ற அபாயம் அதிகரித்ததால், இன்று கச்சா எண்ணெய் விலை 9%க்கும் மேல் உயர்ந்து, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில், பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பேரலுக்கு $6.29 (9.07%) உயர்ந்து, $75.65 ஆக இருந்தது. வர்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் $78.50 வரை உயர்ந்தது; இது ஜனவரி 27ம் தேதிக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும்.

அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $6.43 (9.45%) உயர்ந்து, $74.47 ஆக வர்த்தகமானது. கடந்த 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்தன. அதற்குப் பிறகு, இந்த இரண்டு வகை கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களிலும் ஒரே நாளில் பதிவான மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும். இதுகுறித்து ஐஎன்ஜி வங்கியின் ஆய்வாளர் வாரன் பேட்டர்சன் கூறுகையில், ‘இந்தத் தாக்குதல் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் அபாயத்தைக் கணக்கில் கொண்டு, சந்தை கூடுதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.

அவசர நிலையை அறிவித்து ஈரான் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறது. இதனால் எண்ணெய் விநியோகத் தடைகளை மட்டுமல்லாமல், அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் பதற்றம் பரவும் அபாயத்தை எழுப்பியுள்ளது. ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின’ என்றார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை 9% உயர்ந்துள்ளதால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது. கிட்டத்தட்ட 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு 9% சதவீதம் உயர்ந்துள்ளதால் இந்தியாவில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 என்ற நிலையிலும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.