Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்ரேலில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்ட பணய கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்: இல்லாவிட்டால் நரகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும், ஹமாசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023ல் போர் மூண்டது. இந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கடந்த ஜனவரி 15-ம் தேதி ஒப்பந்தம் கையொப்பமானது. அதில் மூன்று கட்டங்களாக போரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. முதல்கட்ட ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலும், ஹமாசும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கைதிகளை பரிமாறிக்கொண்டன. 2ம் கட்டமாக போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகள் 8 பேரை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ஹமாஸிடம் உள்ள பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். மோதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை திருப்பி அனுப்ப வேண்டும்.

நான் சொல்வது போல் நீங்கள் செய்யாவிட்டால் ஒரு ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். நரகத்துக்கு செல்லவேண்டி இருக்கும். காசா மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.காசா மக்களுக்காக ஒரு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது, ஆனால் பணயக் கைதிகளை வைத்திருக்கும் வரை அது நடக்காது. அப்படிச் செய்தால் நீங்கள் அழிந்துவிடுவீர்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே ஹமாஸ் வசம் உள்ள அமெரிக்க பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அந்த அமைப்பினருடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவர்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீவிரவாத அமைப்புகளுடன் அமெரிக்கா எப்பொழுதும் பேச்சுவார்த்தை நடத்தியது இல்லை.தற்போது முதல்முறையாக ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஹமாஸ் பிடியில் 59 பணயக்கைதிகள் இருப்பதாகவும் இதில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் 5 பேர் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன.

* போர் நிறுத்தத்தை பின் வாங்க முயற்சி

டிரம்பின் அச்சுறுத்தலை நிராகரித்ததுடன் , காசாவில் நீடித்த போர்நிறுத்தத்திற்கு ஈடாக மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்போம் என்று ஹமாஸ் மீண்டும் வலியுறுத்தியது. ஜனவரி மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஆகியோர் பின்வாங்க முயற்சிக்கின்றனர் என ஹமாஸ் குற்றம் சாட்டியது.