Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி : இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து கவிஞர் வைரமுத்து வருத்தம்!!

சென்னை : ‘போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த தாக்குதலுக்காக அமெரிக்கா பேரழிவை சந்திக்கும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் மத்திய கிழக்கில் மட்டுமின்றி உலகளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போர் குறித்து கவிஞர் வைரமுத்து தனது கவிதை பாணியில் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,

"“உலகின் தலையில்

மெல்லிய இழையில்

ஆடிக்கொண்டிருக்கிறது

அணுகுண்டு

"வக்கிர மனங்களால்

உக்கிரமாகுமோ யுத்தம்"

கலங்குகிறது உலகு

ஈரானின்

அணுசக்தித் தளங்களில்

டொமாஹக் ஏவுகணைகள்வீசி

அவசரப்பட்டுவிட்டது

அமெரிக்கா

வல்லரசுகள்

நல்லரசுகள் ஆகாவிடில்

புல்லரசு ஆகிவிடும்

பூமி

தான் கட்டமைத்த நாகரிகத்தைத்

தானே அழிப்பதன்றி

இதுவரை போர்கள்

என்ன செய்தன?

போரிடும் உலகத்தை

வேரொடு சாய்ப்போம்

அணுகுண்டு முட்டையிடும்

அலுமினியப் பறவைகள்

அதனதன் கூடுகளுக்குத்

திரும்பட்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.