மும்பை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வழக்கில் 4 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்புக்ளு ஆள் சேர்த்தல், பயிற்சி அளித்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் விநியோகம், நிதி திரட்டுதல் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது.
இதுகுறித்த விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பட்கா பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்த்து விடப்பட்டு, வெடிபொருள்கள் தயார் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் மொத்தம் 21 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் பணப்பரிவர்த்தனை மோசடி தடுப்பு வழக்கின்கீழ் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பட்கா-போரிவாலி என்ற இரட்டை கிராமங்கள், டெல்லி, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் உத்தரபிரசேத்தின் சில நகரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின்போது பணம் உள்ளிட்ட ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து எந்த தகவல்களும் வௌியாகவில்லை.


