Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரசித்திபெற்ற முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கும் சேலைகள் மறு விற்பனை: பக்தர்கள் அதிர்ச்சி

ஆரல்வாய்மொழி: முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்க பக்தர்கள் வழங்கும் பட்டு சேலைகள் அம்மனுக்கு அணிவிக்கப்படாமல் மறு விற்பனை நடைபெறுவது, பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் பகுதியில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். கார்கள், பஸ்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களும் ஜன்னல் கதவு வழியாக காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். ஆடி மாதம் இந்த கோயிலில் வெகு விமரிசையாக கொடை விழா நடைபெறும். வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சிறப்பு பூஜையும் நடைபெறுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக பலவிதமான காணிக்கைகளை செலுத்துகின்றனர்.

குறிப்பாக குழந்தை பாக்கியத்திற்காக தொட்டில் வாங்கி வைப்பது மற்றும் அம்மனுக்கு பட்டு சேலைகளை காணிக்கையாக வழங்குவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் காணிக்கைகளை வழங்குகின்றபோது கோயில் நிர்வாகத்திடம் முறையாக ரசீது பெற்று வழங்குகின்றனர். இவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக வழங்குகின்ற பட்டு சேலைகளை அம்மனுக்கு அணிவிக்க வேண்டும் என மனதார வேண்டி வழங்குகின்றனர். ஏராளமான பக்தர்கள் பட்டுச்சேலைகளை காணிக்கையாக வழங்கி வருவதால் ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட சேலைகள் குவிகின்றன. இவ்வாறு காணிக்கையாக குவிகின்ற சேலைகளில் பெரும்பாலானவை அதிக விலை மதிப்புள்ள பட்டுப்புடவைகளாகவும் இருக்கின்றன.

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் பக்தர்களால் வழங்கப்படுகின்ற காணிக்கை பொருட்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாடு மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறிதளவு விலை நிர்ணயம் செய்து பொது ஏலம் விடப்படுவது வழக்கம். அதுபோன்று முப்பந்தல் இசக்கி அம்மன் கோயிலிலும் காணிக்கையாக வருகின்ற பட்டுச் சேலைகளை ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமைகளில் பொது ஏலம் விடுவதற்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் ஏலம் விடுவதற்கு மாறாக, பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பட்டுசேலைகள் கோயில் வளாகத்திலேயே ஜவுளிக்கடை போல் தொங்கவிட்டு மறு விற்பனை செய்கிறார்கள். காணிக்கையாக வழங்கப்படும் பட்டுப்புடவைகளை பொது ஏலத்தின் அடிப்படையில் விற்பனை செய்ய வேண்டும் என்ற இணை ஆணையரின் அறிவிப்பையும் அப்பகுதியில் ஒட்டி வைத்துள்ளனர். அம்மனுக்கு அணிவிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்ற சேலைகளை, தங்கள் கண் முன்னே அம்மனுக்கு அணிவிக்காமல் விற்பனை கூடத்தில் தொங்கவிட்டு மறு விற்பனை செய்வது, பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அம்மனுக்காக பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை அம்மன் கருவறையில் சார்த்தி, பக்தர்களின் மனதை குளிர வைக்க வேண்டும். அதை விடுத்து, அந்த சேலையை அப்படியே மறு விற்பனை செய்வது பக்தர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக அமையும் என பொதுமக்கள் கூறி உள்ளனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளின் மூலம் பொது ஏலம் விட வேண்டும் என்று அறிவித்துவிட்டு பட்டுச் சேலைகளை விற்பனை செய்கிறார்கள். இதன் அடிப்படையில் சேலைகளுக்கு விலை நிர்ணயம் செய்கின்றனரா?, விற்பனை செய்யப்பட்ட தொகை கோயிலை சென்றடைகிறதா? அல்லது சில்லறை விற்பனையாக செய்து விட்டு ஏலம் விடப்பட்டதாக கூறி முறைகேடுகள் நடைபெறுகிறதா? இங்குள்ள நிர்வாக அதிகாரி தன்னிச்சையாக முடிவு எடுக்கிறாரா? அல்லது உயர் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.