Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: 300 பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அஜைல் ரோபோட்ஸ் நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி அளிப்பதற்கான கடிதங்களை வழங்கினார். ராணிப்பேட்டை சிப்காட்டில் SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 175 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்துள்ள காற்று பிரித்தெடுப்பு ஆலையையும் திறந்து வைத்தார்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் எஸ்இ நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை, காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டைசிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது. இத்திட்டத்தில், ரூ.300 கோடி முதலீட்டில் 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஓஎல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காற்று பிரித்தெடுக்கும் ஆலை: SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த SOL SpA மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம். ராணிப்பேட்டை சிப்காட்டில் அமைந்துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் காற்று பிரித்தெடுப்பு ஆலை 175 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது. 20 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் அலர்மேல்மங்கை, அஜைல் ரோபோட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரோரி சாக்ஸ்டன் மற்றும் இந்திய செயல்பாடுகள் மேலாண்மை இயக்குநர் சரவணன் சோலையப்பன், SOL இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் அல்டோ ஃப்யுமகல்லி ரொமாரியோ, திட்டத் தலைவர் கைலியோ லாவ் ஃப்யுமகல்லி ரொமாரியோ, SOL இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்வெங்கடேசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.