Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரிடியம் வாங்கி தருவதாக ரூ.11 கோடி மோசடி: தொழிலதிபரை மிரட்டிய கூலிப்படையினர் 3 பேர் கைது; ரூ.1.5 கோடி பங்களாவில் 2 மனைவிகளுடன் உல்லாச வாழ்க்கை; பெங்களூருவில் பதுங்கி உள்ள கும்பல் தலைவனுக்கு வலை

கோவை: கோவையில் இரிடியம் வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் ரூ.11 கோடி மோசடி செய்த கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்தவர் சிராஜூதீன் (44). தொழிலதிபர். இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (43) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.11 கோடி வாங்கி உள்ளார். ஆனால் இரிடியம் வாங்கி கொடுக்கவில்லை. ஏமாற்றமடைந்த சிராஜூதீன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையை அறிந்த பெரோஸ்கான், சிராஜூதீனிடம் வழக்கு விவகாரம் எதுவும் வேண்டாம் என சமாதானம் பேச சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பெரோஸ்கான் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் தந்து விடுவதாகவும், பின்னர் மீதி தொகையை படிப்படியாக திருப்பி தருவதாகவும் தெரிவித்தார். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அவர் கூறியதாக தெரிகிறது. ஆனால் இதனை சிராஜூதீன் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், வழக்கை வாபஸ் பெற சிராஜூதீனை மிரட்டுவதற்காக கூலிப்படையை சேர்ந்த திருநெல்வேலி பழைய செட்டி குளத்தை சேர்ந்த ராஜ் (எ) ராஜ நாராயணன் (48), நாங்குநேரியை சேர்ந்த ஞான பாலாஜி (35), தூத்துக்குடியை சேர்ந்த பொன் முருகானந்தம் (56) ஆகியோரை பெரோஸ்கான் அணுகியுள்ளார். இதற்காக இவர்கள் 3 பேருக்கும் ரூ.50 லட்சம் பணம் தருவதாக பெரோஸ்கான் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து செட்டிகுளம் ராஜ், ஞான பாலாஜி, பொன் முருகானந்தம் ஆகியோர் ஒரு காரில் கோவையில் உள்ள பெரோஸ்கான் வீட்டிற்கு சென்றனர்.

அங்கே முதற்கட்டமாக ரூ.20 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு காரில் சென்னையை நோக்கி செல்ல முயன்றனர். இதுகுறித்த ரகசிய தகவல் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் குனியமுத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது பணத்துடன் சென்னைக்கு செல்ல முயன்ற செட்டிகுளம் ராஜ், பொன் முருகானந்தம், ஞான பாலாஜி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். ரூ.20 லட்சம் பணம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைதான செட்டிகுளம் ராஜ் பிரபல ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்குகள் இருக்கிறது. உறவினர் ஒருவரை கொலை செய்த வழக்கும் உள்ளது. பல கோடி ரூபாய் மிரட்டல் விவகாரங்களில் செட்டிகுளம் ராஜ் சம்பந்தப்பட்ட நபரை கடத்தி சென்று பணிய வைப்பதில் கில்லாடியாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த வழக்கில் பெரோஸ்கான், வெளிநாட்டில் வசிக்கும் அஷ்ரப்கான் (35), சாலியா பீபி, மைசூரை சேர்ந்த அஜய் (30), ஷாஜி, ஸ்ரீதர் என 6 பேரை தேடி வருகிறோம். பெரோஸ்கான் இரிடியம் மோசடி கும்பல் தலைவனாக இருந்து வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டில் இருந்தே இவர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

சில முக்கிய தொழிலதிபர்களிடமும் மோசடி செய்துள்ளார். இவர் மோசடியாக பல கோடி ரூபாய் குவித்த நிலையில், செல்போன் டீலர் தொழிலில் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக கடந்த மாதம் வருமான வரித்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.4.1 கோடி பறிமுதல் செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள பெரோஸ்கானுக்கு பெங்களூருவில் இன்னொரு வீடு இருப்பதாக தெரிகிறது. பெரோஸ்கான் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் குனியமுத்தூரில் உள்ள அவர் வீட்டிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர். மோசடி பணத்தில் பெரோஸ்கான் ரூ.1.5 கோடியில் சொகுசு பங்களா கட்டி இரு மனைவிகளுடன் ஜாலி வாழ்க்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

* சதுரங்க வேட்டை சினிமா பாணியில் வித்தை காட்டி மோசடி

பெரோஸ்கான் இரிடியம் இருப்பதாக சிராஜூதீன் உட்பட சிலரிடம் கூறியுள்ளார். இரிடியத்தை எடுத்தால் மின் அதிர்வு ஏற்படும் எனக்கூறி அதை எடுக்க விசேஷ ஆடை அணிந்த குழு வைத்து நாடகம் நடத்தியுள்ளார். இரிடியம் கோயில் கோபுர கலசங்களில் இருக்கும். இதை எடுத்து வைத்திருக்கிறோம். இதை வீட்டில் வைத்திருந்தால் அனைத்து வகை செல்வங்களும் குவிந்து விடும். அவ்வளவு சக்தி இந்த இரிடியத்திற்கு உண்டு எனக் கூறியுள்ளார். இரிடியம் கலசம் என செம்பு கலசத்தையும் தூரத்தில் இருந்து காட்டியிருப்பதாக தெரிகிறது. சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் மோசடியை இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நடத்தியுள்ளார்.