கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள கொல்கத்தா அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், காயம் காரணமாக விலகி உள்ளார். இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான, ஐபிஎல் சீசன் வரும் 22ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், காயம் காரணமாக தொடர் முழுவதும் விலகியுள்ளார்.
அவருக்கு பதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியா, கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக, அந்த அணி நிர்வாகம் எக்ஸ் வலை தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கர்ரன், சென்னையில் நேற்று, சக சென்னை அணி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டார். அவரை, சென்னை அணி ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. சென்னை அணி, வரும் 23ம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது.