சூடுபிடிக்கத் துவங்கும் ஐபிஎல்; கேப்டன் கம்மின்ஸ் வரவால் சன்ரைசர்ஸ் வீரர்கள் உற்சாகம்: ஐதராபாத்தில் தீவிர பயிற்சி
ஐதராபாத்: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐதராபாத்தில் பயிற்சியில் கலந்து கொண்டதால் சக வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஐபிஎல் தொடரில் கவனிக்கத்தக்க அணிகளில் ஒன்று, சன் ரைசர்ஸ் ஐதராபாத். முன்னாள் சாம்பியனான சன் ரைசர்ஸ், இடையில் கேப்டன்களின் சொதப்பலால் கொஞ்சம் தடுமாறியது. ஆனால் 2024ம் ஆண்டு தொடரில் கேப்டன் பேட் கம்மின்ஸ் வருகைக்கு பிறகு கலக்க ஆரம்பித்தது. அந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் 2வது இடம் பிடித்து நேரடியாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. மேலும், இறுதி ஆட்டத்திலும் களம் கண்டது.
இந்த தொடரிலும் அதே உற்சாகத்துடன் களம் காண சன் ரைசர்ஸ் காத்திருக்கிறது. அதற்காக ஏற்கனவே அணி வீரர்கள் நிதிஷ் ரெட்டி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷண், ஹர்ஷல் படேல், ஜெயதேவ் உனத்கட், ராகுல் சஹர் கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பயிற்சி முகாமில் நேற்று முன்தினம் இணைந்ததும் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தவிர, சக ஆஸி வீரர்கள் டிராவிஸ் ஹெட், ஆடம் ஸம்பா ஆகியோரும் அணியுடன் கை கோர்த்துள்ளனர்.
இவர்களுடன் ஹென்ரிச் கிளாஸன், வியான் முல்டர் ஆகியோரும் சாம்பியன்ஸ் கோபை போட்டி முடிந்ததுமே அணியுடன் இணைந்து விட்டனர். இந்த முறை ‘நெருப்போடு விளையாடு’ என்ற ‘டேக் லைன்’ உடன் களம் காணப்போகும் ‘ஆரஞ்ச் ஆர்மி’ பயிற்சியிலேயே பட்டையை கிளப்புகிறது. சன்ரைசர்ஸ் அணி, முதல் ஆட்டத்தை சொந்த களமான ஐதராபாத்தில் விளையாட உள்ளது. மார்ச் 23ம் தேதி மாலை நடைபெற உள்ள அந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களம் காண உள்ளன.