Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலீட்டாளர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்த விவகாரம் மயிலாப்பூர் நிதி நிறுவன தலைவர் தேவநாதன் யாதவ் அதிரடியாக கைது

* புதுக்கோட்டையில் பதுங்கி இருந்தபோது சுற்றிவளைத்த போலீசார்

* பாஜ வேட்பாளராக நின்று முதலீட்டாளர்களின் பல கோடியை சுருட்டியது அம்பலம்

சென்னை: ஓய்வுபெற்ற ஊழியர்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில், புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், சிவகங்கை தொகுதி பாஜ வேட்பாளருமான தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது ெசய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நிதி நிறுவனத்தின் பல கோடி ரூபாய் பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.525 கோடிக்கு மேல் உள்ளது. மயிலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தங்களது பிள்ளைகள் அனுப்பும் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. அதேபோல் இந்த நிதி நிறுவனத்தை பராமரித்து வந்த முன்னாள் நிர்வாகிகள், முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து, 300 கிலோவுக்கு மேலான தங்கத்தை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக தேவநாதன் யாதவ், இயக்குநராக தேவ சேனாதிபதி, நிரந்தர நிதி செயலாளராக ரவிச்சந்திரன் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.

தேவநாதன் யாதவ் ‘இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் தனியாக கட்சி தொடங்கி அதன் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் எனவும், எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தலாம். செலுத்தும் பணத்திற்கு ஒவ்வொரு மாதமும் 10 முதல் 11 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலும் ஏராளமானவர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு சரியாக மாதாந்தர வட்டி தராமல் இழுத்தடிக்கப்பட்டது. அதேநேரம் பிரச்னைக்குரிய முதலீட்டாளர்களுக்கு மட்டும் நிதி நிறுவனம் முன் தேதியிட்டு காசோலைகள் கொடுத்தன. ஆனாலும் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்டோர் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு வந்தனர்.

அதேநேரம், நிதி நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான தேவநாதன் யாதவ் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளராக களம் இறங்கினார். தேவநாதன் யாதவ் தேர்தலில் போட்டியிடும் முன்புவரை முதலீட்டாளர்களுக்கு வட்டியில் சிறிய தொகையாவது கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் பாஜ வேட்பாளராக போட்டியிட்டு பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியதும், முதலீட்டாளர்களுக்கு முற்றிலும் பணம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். நிலைமை கைமீறி போனதால் நிதி நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் முதலீட்டு பணத்தை விரைவில் முழுவதும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் அந்த உறுதிமொழிப்படி, நிதி நிறுவனம் இன்று வரை யாருக்கும் முழு பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தனர். அந்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மயிலாப்பூர் சாசுவத நிதி நிறுவனம் 5 ஆயிரம் பேரிடம் சுமார் ரூ.525 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் நிதி நிறுவனத்தின் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடிக்கான முகாந்திரம் இருந்ததால், மயிலாப்பூர் சாசுவத நிதி நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே மோசடி தொடர்பாக நேரில் ஆஜராக கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பலமுறை தேவநாதன் யாதவுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் பல காரணங்களை கூறி தள்ளிப் போட்டு வந்தார். அதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதன் யாதவை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதை தெரிந்து கொண்ட தேவநாதன், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு கடந்த சில நாட்களாக தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் தேவநாதன் யாதவை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது தேவநாதன் புதுக்கோட்டையில் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்து அங்கு சென்று அவரை தனிப்படையினர் கைது செய்தனர். பிறகு அவரை திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து 1 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மயிலாப்பூர் சாசுவத நிதி நிறுவனத்தின் பல கோடி ரூபாய் பணத்தை நாடாளுமன்ற தேர்தல் செலவுக்கு அவர் பயன்படுத்தியதால் முதலீட்டாளர்களுக்கு முறையாக மாதாந்திர வட்டி பணம் கொடுக்க முடியாமல் போனதாக தெரியவந்தது. அதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு அழைத்து வந்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவநாதன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தின் முன்பு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலீட்டாளர்களின் ரூ.525 கோடி வைப்பு நிதியை மோசடி செய்த வழக்கில் சிவகங்கை பாஜ வேட்பாளரான தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதன் யாதவை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

* இதை தெரிந்து கொண்ட தேவநாதன், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு தலைமறைவானார்.

* பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

* புதுக்கோட்டையில் நண்பர் வீட்டில் தேவநாதன் பதுங்கி இருந்தது தெரிந்து, அங்கு சென்று அவரை தனிப்படையினர் கைது செய்தனர்.