2026 தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
நெல்லை: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருத்தேரோட்டத்தை சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் பி. கே.சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப்பெரும் திருவிழா கடந்த ஜூன் 30 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை மற்றும் மாலையில் சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலா, சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மாள் திருக்கோயில் ஆனிப் பெரும் திருவிழாவை முன்னிட்டு இன்றைக்கு ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய தேரான இந்தத் திருத்தேரின் 519-வது தேரோட்டம் இன்றைக்கு வெகு விமரிசையாக சிவ, சிவ என்ற கோஷத்தோடு திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கின்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். கடந்த ஆண்டு தேரோட்டத்தில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனை முழுமையாக களைந்து அனைத்து தேர்களையும் மரமாத்து செய்தும், புதிதாக ரூ.59 லட்சம் செலவில் சண்டிகேஸ்வரர் தேர் செய்யப்பட்டும், ரூ.43 லட்சம் செலவில் சுவாமி தேர் விநாயகர் தேர் சுப்பிரமணிய தேர் சண்டிகேஸ்வரர் தேருக்கு புதிதாக மர குதிரைகள், மர பிரம்மா, அம்பாள் தேருக்கு மரத்தினால் ஆன பிரம்மா மற்றும் மறை யாழியும் செய்யப்பட்டுள்ளது.
ரூ.6.50 லட்சம் மதிப்பில் தேருக்கு புதிதாக வடக்கயிறுகள் வாங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்றைக்கு வீதி உலா வருகின்ற அனைத்து தேர்களும் புதுப்பிக்கப்பட்டு சிறந்த முறையில் இந்த தேரோட்டம் நடைபெறுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் திருத்தேர் உலா வரும் அனைத்து சாலைகளையும் செப்பனிட்டு உயரத்தில் மின்கம்பிகள் தடைபடாமல் இருப்பதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சிறப்போடு தேர் பவனி நடைபெறும். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.75 கோடி மதிப்பீட்டில் 130 திருக்கோயில்களுக்கு 134 மரத்தேர்கள் புதிதாக செய்யப்பட்டு வருகின்றன. ரூ.19 கோடி செலவில் 72 திருக்கோயில்களில் மராமத்து பணிகள் நடைபெற்றுள்ளன.
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன் என்ற வழியில் திருத்தேர்கள் வெயிலிலும், மழையிலும் இருக்கக் கூடாது என்பதற்காக முதலமைச்சர் ரூ.30 கோடியை ஒதுக்கீடு செய்து 197 திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகளை அமைத்த தந்துள்ளார்கள். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, ரூ.31 கோடி செலவில் 5 தங்கத் தேர்களும், ரூ.29.77 கோடி செலவில் 9 வெள்ளித்தேர்களும் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் பெரியபாளையம் திருக்கோயில் தங்கத்தேர், திருத்தணி மற்றும் சென்னை காளிகாம்பாள் திருக்கோயில் வெள்ளித்தேர்கள் பணி நிறைவு பெற்று பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் உலா வருகின்றன. இதர தங்கத்தேர்கள் மற்றும் வெள்ளித்தேர்கள் இந்தாண்டு இறுதிக்குள் வெள்ளோட்டம் விடப்படும். மேலும், இந்தாண்டு வேலூர் மாவட்டம், வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோயிலுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்யப்பட உள்ளது.
150 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் இருந்த 8 திருக்கோயில்களின் தேர்களை ஓட்டிய பெருமை இந்த அரசையே சாரும். இன்று மட்டும் மூன்று மாவட்டங்களில் தேரோட்டம் நடைபெறுகின்றது. அதில் கண்டதேவி தேரோட்டமும் ஒன்றாகும். ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை ஓட்டிய முத்தமிழஞர் கலைஞரை போல் 18 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த கண்டதேவி தேரோட்டத்தை இரண்டாவது ஆண்டாக இன்றைக்கு ஓட்டிய பெருமை நமது முதலமைச்சர் அவர்களையே சாரும். இராமேசுவரம், சமயபுரம், சேலம், திருத்தணி, வடபழனி ஆகிய திருக்கோயில்களில் ஓடாமல் இருந்த தங்கத்தேரையும் ஓட்டிய பெருமை இந்த ஆட்சியை சாரும் காய்ச்சலிலே பலவகை காய்ச்சல் உண்டு தற்போது பாஜக மற்றும் அதிமுக வினருக்கு 2026 ஆம் ஆண்டு விஷ காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்ற குடமுழுக்கு பெருவிழாவை பார்த்த பிறகு இனி தமிழ்நாட்டில் மீண்டும் மலரப்போவது முதலமைச்சரி ஆட்சி தான் என்பதனை மக்கள் கூறி இருக்கிறார்கள். எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் அவர்கள் கையிலே வைத்திருக்கின்ற சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என எத்தனை அதிகாரத்தை கொண்டு ஒன்று சேர்ந்து வந்தாலும் முதலமைச்சர் தலைமையில் அமைந்திருக்கின்ற வலுவான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை வீழ்த்துகின்ற சக்தி தமிழகத்தில் எவருக்கும் இல்லை. பக்தர்கள் தங்கும் விடுதிகளை கட்டும்போது திட்டமிட்டு நீதிமன்றத்திற்கு சென்று தடை பெறுகின்றனர்.
பல்வேறு சட்ட போராட்டத்திற்கு பிறகு தான் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகளை உருவாக்கி தந்து வருகின்றோம். திருச்செந்தூர் குடமுழுக்கிற்கு கூட மூன்று முறை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும், இரண்டுமுறை உச்சநீதிமன்றத்திலும் வழக்கு போட்டனர். குடமுழுக்கிற்கு நேரம் சரியில்லை. முன்னேற்பாடு பணிகள் இல்லை, திருப்பணிகள் முடியவில்லை என சொல்லி வழக்குகளை தொடுத்தனர். அனைத்தையும் வென்று நேற்றைக்கு முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளந்தது. திராவிட மாடல் ஆட்சியில் தடைகள் பல உண்டு என்றால் அதனை தகர்த்தெறிகின்ற வல்லமை எங்கள் முதல்வருக்கு உண்டு. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் ஓலைச்சுவடிகளை பாதுகாக்கவும், அதில் உள்ள குறிப்புகளை நூலாக்கம் செய்யும் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
ஒன்றரை லட்சம் ஓலைச்சுவடிகள் படியெடுத்து நூலாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓலைச்சுவடிகளை அவை கண்டெடுக்கப்பட்ட மாவட்டத்திலேயே கண்காட்சியாக அமைக்க திட்டமிட்டுள்ளோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற இந்த ஆட்சியில் இன்று நடைபெற்ற நெல்லையப்பர் தேரோட்டத்தில் கிருத்துவரான சட்டப்பேரவை தலைவர் அப்பாவு , இஸ்லாமியரான சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், இந்துவான நானும் வடம் பிடித்து தொடங்கி வைத்திருக்கின்றோம். இதைவிட ஒரு தெய்வீகமான காட்சி எந்த மாநிலத்திலும் நடந்திருக்காது இப்படிப்பட்ட ஒரு நல்ல சூழலை உருவாக்கித் தந்திருக்கின்ற திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதலமைச்சர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் இப்படிப்பட்ட மகிழ்ச்சிகள் தொடர்ந்து இருக்கும் என்பதால் நெல்லையப்பரும் இதற்கு உடன்படுவார் என்ற நம்பிக்கையோடு இந்த ஒற்றுமை தொடரும், தொடர வேண்டும். இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பார் எங்கள் முதல்வர் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் தவத்திரு தருமபுர ஆதீனம், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ், உறுப்பினர்கள் மு. அப்துல் வஹாப், நயினார் நாகேந்திரன், ரூபி ஆர். மனோகரன், மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர். ராஜு, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, துணை ஆணையர் ஜான்சி, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் எம். செல்லையா மற்றும் அறங்காவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.