சர்வதேச கமிட்டி ஒப்புதல் ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் குத்துச் சண்டை: 2028 லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும்
லாஸ் ஏஞ்சல்ஸ்: வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டை போட்டி மீண்டும் சேர்க்கப்பட உள்ளது. குத்துச் சண்டை போட்டியின் நிர்வாகம், அதன் நிதி மேலாண்மை, குத்துச் சண்டை போட்டிகளின்போது குத்துகளுக்கு பாயின்ட் தருவது, வெற்றி தோல்வி முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் காரணமாக, கடந்த 2019ல், சர்வதேச குத்துச் சண்டை சங்கத்துக்கு (ஐபிஏ), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, 2023ம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து குத்துச் சண்டை போட்டி நீக்கப்பட்டது.
அதன் பின், ஒலிம்பிக்கில் குத்துச் சண்டை போட்டியை மீண்டும் சேர்ப்பதற்காக பல்வேறு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வரும் 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டை போட்டியை சேர்க்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் தலைவர் தாமஸ் பேக் தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு, ஐஓசியின் 100 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அந்த நடவடிக்கை சம்பிரதாயமான ஒன்று என்றும் அவர் கூறினார்.