காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11718கோடி ஒதுக்கீடு மற்றும் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு மசோதா உள்ளிட்டவற்றுக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் யூஜிசி மற்றும் ஏஐசிடிஇ போன்ற அமைப்புக்களை மாற்றும் உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதற்கான மசோதாவிற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னர் இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா என்று பெயரிடப்பட்டு முன்மொழியப்பட்ட சட்டம் இப்போது விக்சித் பாரத் சிக்க்ஷா ஆதிக் ஷன் மசோதா என பெயரிடப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்ட ஒற்றை உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையமானது பல்கலைக்கழக மானிய ஆணையம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் தேசிய ஆசிரியர் கவுன்சில் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும். விக்சித் பாரத் சிக்க்ஷா ஆதிக் ஷன் அமைப்பதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணையத்தின் வரம்பிற்குள் மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகள் வராது.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான முன்மொழிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2027 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு ரூ.11,718கோடியை ஒதுக்கீடு செய்து அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது முதல் டிஜிட்டல் செயல்முறையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். 2026ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகள் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, 2027பிப்ரரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரம்மாண்ட பயிற்சியில் சுமார் 30லட்சம் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு உயர்வு: காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டிசம்பர் 19ம் தேதி முடிவடையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. காப்பீட்டுத்துறையில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் முயலும் காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதா 2025 நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரில் பட்டியலிடப்பட்டுள்ள 13 சட்டங்களில் ஒன்றாகும்.
* 71 சட்டங்கள் ரத்து
அமைச்சரவை கூட்டத்தில் பயன்பாட்டிற்கு அப்பாற்பட்ட 71 சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 71 சட்டங்களில் 65 முதன்மை சட்டங்களுக்கான திருத்தங்கள் மற்றும் 6 முதன்மை சட்டங்களாகும். ரத்து செய்ய முன்மொழியப்பட்ட சட்டங்களில் குறைந்தபட்சம் ஒன்று பிரிட்டிஷ் காலத்தை சேர்ந்தது என கூறப்படுகின்றது. முன்மொழியப்பட்ட இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற்றப்பின் ரத்து செய்யப்பட்ட மொத்த சட்டங்களின் எண்ணிக்கையானது 1633ஆக இருக்கும்.
* தனியார் பங்களிப்பு அணுசக்தித் துறை
2047ம் ஆண்டுக்குள் இந்தியா 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எதிர்நோக்கும் நிலையில், சிவில் அணுசக்தி துறையை தனியார் பங்களிப்புக்காக திறக்க முயலும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை மாற்றுவதற்கான நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் முன்னேற்றம் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது.
* நிலக்கரி ஏலக் கொள்கை
நியாயமான அணுகல் மற்றும் வளத்தின் உகந்த பயன்பாட்டை உறுதி செய்வதற்காக பல்வேறு தொழில்துறை பயன்பாடுகள் மற்றும் ஏற்றுமதிகளுக்கான நிலக்கரி இணைப்புகளை ஏலம் விடுவதற்கான நிலக்கரி இணைப்பு ஏலக்கொள்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
* தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
2026ம் பருவத்திற்கான தேங்காய் அரைப்பதற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது குவிண்டாலுக்கு ரூ.445 ஆக அதிகரித்து ரூ.12,027 ஆக அரசு உயர்த்தியுள்ளது. இதே கால கட்டத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ட ஆதரவு விலையானது குவிண்டாலுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.12500 ஆக உயர்த்தி அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


