Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆணவ அரசின் அவமதிப்பு: ராகுல்காந்தி

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர், நமது மக்கள் பணியாளர்களிடம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை குறித்து ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஆனால் இந்த அரசு அவரது கோரிக்கையை ஆணவத்தோடு அணுகியுள்ளது. அவரை அவமரியாதை செய்துள்ளது. ஆனால், அவரைப் போன்ற சிறு முதலாளியாக இல்லாமல் பெரும் பணக்காரராக இருந்து சட்ட விதிகளை மாற்றக் கோரியிருந்தால், தேசிய உடைமைகளையே சொந்தம் கொண்டாட விரும்பியிருந்தால் அவர்களுக்கு மோடி சிவப்புக் கம்பளம் விரித்திருப்பார். நமது தொழில்துறையினர் ஏற்கனவே பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூடவே கடுமையான வங்கி நடைமுறைகளும், வரி விதிப்புகளும், ஜிஎஸ்டியும் அவர்களை வாட்டுகிறது. இவை எல்லாம் பத்தாது என அவர்கள் இப்படி அவமதிக்கப்படுகிறார்கள். அதிகாரத்தில் இருப்போரின் நான் எனும் அகந்தை மேலோங்கும் போது அவமானப்படுத்துதல் தான் அவர்களின் எதிர்வினையாக அமைகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர் பல ஆண்டுகளாக வரி சிக்கல் உள்ளிட்டவற்றில் இருந்து நிவாரணம் கோரி வருகின்றனர். ஆனால் இந்த ஆணவ அரசு அவர்களுக்கு செவிசாய்த்திருந்தால் எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டி விதிப்பு முறையைக் கொண்டுவந்து லட்சக் கணக்கான தொழில் முனைவோரின் பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும்’ என்று கூறி உள்ளார்.

* நக்கலாக சிரித்து அதிகார திமிரில் மன்னிப்பு கேட்க வைப்பதா? கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியிருப்பதாவது: கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் அதிகார திமிரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். பொதுமக்களுடன் உரையாடும் நிகழ்ச்சிகளில் நிதியமைச்சர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மோடி அரசு வரி பயங்கரவாதத்தை திணிக்கிறது. ஆனால் பிரதமர் மோடியின் கோடீஸ்வர நண்பர்களுக்கு வரி குறைப்பு கொள்கையை பின்பற்றப்படுகிறது. மோடி அரசு அமல்படுத்தியுள்ள குறைபாடுள்ள ஜிஎஸ்டி பற்றி உரிமையாளர் ஒரு நேர்மையான கேள்வியைக் கேட்டார். அதற்கு நிதியமைச்சர் முதலில் நக்கலான சிரிப்பை பதிலாக அளித்தார்.

அதன் பின்னர் கேமரா முன்பு மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிறுகுறு வணிக உரிமையாளர்கள் மோடி அரசு அமல்படுத்திய ஒரு குறைபாடுள்ள ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தொடர்ச்சியான நிதி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மோடியின் பெரிய கோடீஸ்வர நண்பர்களுக்கு மட்டும் நன்மை செய்வதில் பாஜ உறுதியாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு எளிய ஜிஎஸ்டி தேவை என்று முதல் நாளில் இருந்து காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் கூட பா.ஜ இயற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டங்களுக்குப் பதிலாக காங்கிரஸ் புதிய ஜிஎஸ்டியை அமல்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத ஒற்றை வரிவிதிப்பு முறை மட்டும் (சில விதிவிலக்குகளுடன்) உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஆனால் பா.ஜ சிறு உரிமையாளர்களை கொள்ளையடித்து, அவர்களின் தூதர்களை அசிங்கப்படுத்தும் வேலையை செய்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

* நிர்மலாவின் வெட்கக்கேடான செயல்

அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சிறு வணிக உரிமையாளர்களுடன் நடந்த சந்திப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் திமிர்பிடித்த, வெட்கக்கேடான நடத்தையை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த நடத்தைக்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். சிறு வணிக உரிமையாளர்களிடம் மோடி அரசின் திமிர்பிடித்த நடத்தை இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கிறது.

விரக்தியில் இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

* கோடீஸ்வரர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி சலுகை சிறுகுறு தொழில் நிறுவனர்களுக்கு அவமானம்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் நேற்று டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் மாறுபட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் அபத்தத்தை எடுத்துக்காட்டினார். இந்த நியாயமற்ற வரி அதிகாரிகளையும் கடினமான கணக்கீடுகளுடன் சுமைப்படுத்துகிறது என்று தெரிவித்தார். அவரின் இந்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, நிதியமைச்சர் அவரை மேடையில் கேலி செய்தார். அடுத்த 24 மணி நேரத்திற்குள், சீனிவாசன் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வீடியோவை பா.ஜ தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டு அவமானப்படுத்தி உள்ளது. மக்கள் தங்கள் கவலைகளை அரசிடம் தெரிவிக்க அனுமதிக்காவிட்டால், ஆட்சி மற்றும் கொள்கை உருவாக்கம் எப்படி நடக்கும்? ஒரு வேலையையும் உருவாக்காத இந்தியாவின் கோடீஸ்வரர்களின் பாக்கெட்டுகளில் வரிவிலக்கு மூலம் ஒன்றிய அரசு ரூ.4 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. ஆனால் அன்னப்பூர்ணா உரிமையாளர் போல் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அவமானப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கூறினார்.