Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒட்டு கேட்கும் கருவி கண்டுபிடிப்பு தைலாபுரத்தில் தனியார் துப்பறியும் நிறுவனம் 3 மணி நேரம் சோதனை: அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை, ராமதாஸ் உறுதி

திண்டிவனம்: தைலாபுரம் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அங்கு தனியார் துப்பறியும் நிறுவனம் 3 மணி நேரம் சோதனை நடத்தியது. அவர்களின் ஆய்வறிக்கை கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்தார். விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் நடந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ், ‘வீட்டில் தான் உட்காரும் நாற்காலி அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது அதிக விலை கொடுத்து லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்டது’ என்று தெரிவித்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ராமதாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஒட்டு கேட்கும் கருவியை ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து தனியார் துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவினர் ராமதாஸ் வீட்டுக்கு நேற்று வந்தனர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்த பின்னர் தோட்டத்திலிருந்து கிளம்பிச் சென்றனர்.

ராமதாஸ் வீட்டை முழுமையாக சோதனையிட்டு ஆய்வு செய்த அந்நிறுவனத்தினர் இதுபற்றிய விரிவான அறிக்கையை ராமதாசிடம் விரைவில் வழங்க உள்ளனர். அதன்பிறகு இவ்விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் ராமதாஸ் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்த ஷோபா அகற்றப்பட்டு, ராமதாசுக்கு புதிய ஷோபா போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்துக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் நேற்று வந்தனர். அவர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சிறிதுநேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இப்பொழுது நான் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். பாட்டாளி சொந்தங்கள் தினமும் என்னை வந்து சந்தித்து வருகின்றனர், வந்து கொண்டே இருக்கின்றனர். 75 வயதுக்கு மேலே உள்ள பாட்டிகளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு ராமதாசை பார்க்கப் போகிறேன் என வீட்டில் சொல்லிவிட்டு என்னை சந்திக்க வந்து கொண்டே இருக்கின்றனர்’ என்றார்.

தொடர்ந்து, வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருப்பதாக நீங்கள் தெரிவித்து இருந்தீர்கள். அதுகுறித்து ஆய்வு செய்யப்படுகிறதா?, ஏதேனும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, ‘ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அறிக்கை வந்த பிறகு தெரியும்’ எனத் தெரிவித்தார். தனியார் நிறுவனம் ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக ஆய்வு செய்ததில் என்ன தெரிகிறது, ஆய்வு இன்னும் தொடர்கிறதா, முடிந்துவிட்டதா என்று நிருபர்கள் கேட்க, ‘ஆய்வு செய்து கொண்டே இருக்கின்றனர்’ என்றார்.

தங்களுக்கு யார் மீதேனும் சந்தேகம் இருக்கிறதா என கேட்டதற்கு, ‘எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. ஆய்வு செய்து முடித்த பிறகுதான் தெரியும்’ என பதிலளித்தார். நீங்கள் இல்லாத நேரத்தில் வந்து தாயாரை அன்புமணி சந்தித்து விட்டு சென்றது தொடர்பாக நிருபர்கள் கேட்க, இதெல்லாம் ஒரு கேள்வியா என கூறிய ராமதாஸ், ‘பொதுக்குழு கூட்டுவதற்கான காலம் வரவில்லை. அதற்கான காலம் வரும்போது உங்களை முதல் இருக்கையில் அமர வைப்பேன். உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றார்.