இன்ஸ்பெக்டர் தந்தையுடன் சேர்ந்து மனைவிக்கு போலீஸ்காரர் வரதட்சணை கொடுமை ஓவரா கத்துனா... தொண்டைய இறுக்கிட்டேன்...
* அடித்ததை தங்கையிடம் சொல்லி சிரித்து மகிழ்ந்த ஆடியோ வைரல், இருவரும் சஸ்பெண்ட்
மதுரை: விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் செந்தில்குமரன். இவரது மகன் பூபாலன், மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றுகிறார். இவருக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7, 5 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையில் பூபாலன் வரதட்சணை கேட்டு கொடூரமாக தாக்கியதில் காயமடைந்ததாக கூறி, மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அவரது மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவர் மற்றும் மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், திருமணத்தின்போது 60 பவுன் நகை, புல்லட் மற்றும் சீர்வரிசை உள்ளிட்டவை கொடுத்திருந்ததாகவும் மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின்பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் தனது மனைவியை கழுத்தை நெரித்தும், காலால் மிதித்தும் டார்ச்சர் செய்ததாக தங்கையிடம் பூபாலன் சிரித்தபடி பேசும் அதிர்ச்சிகரமான ஆடியோ வெளியாகி உள்ளது. ஆடியோவில் கூறியிருப்பதாவது:
பூபாலன்: அவளை பிராண்டி விட்டேன், மூஞ்சே மாறிவிட்டது.
சகோதரி: அந்தளவிற்கு பிராண்டி விட்டியா? அந்த அளவிற்கு அப்படி என்ன பேசினா அவ?
பூபாலன்: பேசினா... எரிச்சலா வந்திருச்சி... வாய பொத்தி, பொத்தி நகத்தை வைத்து கீறி விட்டேன். ஓவரா கத்தினா, அவ தொண்டைய புடிச்சு இறுக்கிட்டேன். வலிக்குதுன்னா. கால வைச்சி லாக் செஞ்சிட்டேன். முட்டிக்கால் அவளுக்கு ‘லாக்’ ஆகிடுச்சு. நல்லபாம்பை போல சுருட்டி வளைத்து நெளிச்சுட்டேன். உதட்டில் காயங்கள் ஆயிருச்சு...!
சகோதரி: சொல்லி வச்சிரு. வாய் ரொம்ப பேசினா இது மாதிரி தான் இருக்கும்...
இந்த ஆடியோ வைரலான நிலையில் போலீஸ்காரர் பூபாலன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை தேடிவரும் நிலையில் பூபாலன் மற்றும் அவரது தந்தையான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமரனை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.