கொலை வழக்கில் ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் மனு மக்களை காக்கும் போலீசை கைது செய்யும் நிலை வேதனை தருகிறது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து
மதுரை: கொலை வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, மக்களை காக்க வேண்டிய போலீசை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிப்பதாக கூறியுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டி வலசையைச் சேர்ந்தவர் சத்தியஷீலா. இவர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் மற்றும் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டராக இருந்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா தகராறில் ராமர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார், இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவை கைது செய்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கொலை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘மனுதாரர் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது’’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பி.புகழேந்தி, ‘‘மனுதாரர் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மக்களை காக்கவேண்டிய போலீசை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. எனவே, அந்த வழக்குகள் சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்த பிறகே இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியும்’’ எனக் கூறி, விசாரணையை ஜூன் 18க்கு தள்ளி வைத்தார்.