Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆய்வு குழு பரிந்துரைத்த பாதுகாப்பு நடவடிக்கையை நிறைவேற்றும் வரை எண்ணூர் உரத்தொழிற்சாலையில் எவ்வித செயல்பாடும் இருக்காது: பேரவையில் அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தகவல்

சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் உர தொழிற்சாலையில் அமோனியா வாயு வெளியேறியது குறித்து எம்எல்ஏக்கள் பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), டாக்டர் சதன் திருமலைக்குமார் (மதிமுக), சின்னப்பா, மு.பூமிநாதன், செல்வபெருந்தகை(காங்கிரஸ்), சின்னத்துரை(மார்க்சிஸ்ட்), ஜவாஹிருல்லா(மமக), இரா.அருள்(பாமக), வேல்முருகன்(தவாக), டி.ராமச்சந்திரன், மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அப்போது, பொதுமக்கள் நலன் கருதி கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து சுற்றுச்சுழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது:சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் உரத் தொழிற்சாலையில், விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தேவைப்படும் அமோனியா வாயு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, துறைமுகத்திலிருந்து உரிய குழாய்கள் மூலம் ஆலையில் உள்ள சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், 26.12.2023 நள்ளிரவு 11.45 மணியளவில் இந்தத் தொழிற்சாலையின் அமோனியா குழாய்களில் வாயுக் கசிவு ஏற்பட்டு, குடியிருப்பு வாசிகளுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு, சுவாசக் கோளாறு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டன. துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, 20 நிமிடங்களில் வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து ஆலையின் உற்பத்தியை நிறுத்த டிசம்பர் 27ல் உத்தரவிட்டது. அதன்படி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை இயங்குவதாக கூறுவது முற்றிலும் தவறு.

இதுகுறித்து ஆய்வு செய்ய வாரியம் அமைத்த 7 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு அறிக்கையில் தொழிற்சாலையில் கடலுக்கு அடியில் அமோனியா கொண்டு செல்லும் குழாய்களுக்கு பதிலாக, புதிய குழாய்கள் அதிநவீன கண்காணிப்பு தானியங்கி கட்டுப்பாடு, விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும் முழு தானியங்கி கட்டுப்பாடு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது அமோனியா சேமிப்பு தொட்டி மற்றும் குழாய்களின் பாதுகாப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

அதை நிறைவேற்றுமாறு வாரியம் தொழிற்சாலையை அறிவுறுத்தியுள்ளது. மேலும் குழுவின் பரிந்துரையின்படி இழப்பீடாக ரூ.5 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 888 ஏன் வசூலிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழு பரிந்துரைத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இத்தொழிற்சாலை மேற்கொள்வதை மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் உறுதி செய்யப்படும். அதுவரை அங்கு எந்த செயல்பாடும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.