Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தூக்கமின்மை பிரச்னையை எதிர்கொண்ட தைவான் மாடல் அழகி கோமா நிலையில் மரணம்

தைவான்: தைவானைச் சேர்ந்த பிரபல கார் ஷோ மாடல் அழகியான சாய் யூசின், தூக்கமின்மை பிரச்னைக்காக எடுத்துக்கொண்ட சிகிச்சையானது விபரீதமாக முடிந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். பல ஆண்டுகளாகத் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த அவர், நண்பரின் பரிந்துரையின் பேரில் தைபேவில் உள்ள ‘ஃபேரி கிளினிக்’ என்ற மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கு, ‘கொழுப்பு நீக்குதலின் தந்தை’ என்று அழைக்கப்படும் மருத்துவர் வூ ஷாவோஹு, அவருக்கு ‘பால் ஊசி’ எனப்படும் மயக்க மருந்தைச் செலுத்தியுள்ளார். அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் புரோபோஃபால் என்ற மருந்தைச் செலுத்திய பிறகு மருத்துவர் வூ ஷாவோஹு அறையை விட்டு வெளியேற, ஒரு ஆண் உதவியாளர் மட்டுமே இருந்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை காரணமாக, குறுகிய நேரத்தில் அதிகப்படியான மயக்க மருந்து சாய் யூசின் உடலுக்குள் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு திடீரென மாரடைப்பும், சுவாச நின்று போனது. உதவியாளர் பதற்றத்துடன் மருத்துவருக்குத் தகவல் அளிக்க, அவர் வீடியோ கால் மூலமாக முதலுதவி செய்ய வழிகாட்டியபடியே மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால், அவர் வருவதற்குள் சாய் யூசினின் சுவாசம் நின்று, இதயம் செயலிழந்துவிட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 18 நாட்கள் கோமா நிலையில் இருந்தார்.

அவர் குணமடைவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால், அவரது குடும்பத்தினர் கடந்த 12ம் தேதி, உயிர்காக்கும் கருவிகளை அகற்ற முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, மருத்துவர் வூ ஷாவோஹு மீது கவனக்குறைவால் கடுமையான காயம் ஏற்படுத்துதல் மற்றும் மருத்துவப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது ஆகிய பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சாய் யூசினின் மரணம் சமூக ஊடகங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.