Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக மனுதாரர்கள் அணுகும்போதே உரிய அனுமதி வழங்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

சென்னை: அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு நீதிமன்ற பல்வேறு வழக்குகளில் மனுதாரர்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பாணைகளில், அரசுப் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தருமாறும், பள்ளிகளுக்கு தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வழங்குமாறும் ஆணைகள் பெறப்படுகின்றன. இதுபோன்ற நேர்வுகளில், மாவட்ட கல்வி அலுவலர்களால் அப்பணிகளுக்கு அனுமதி வழங்க தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்துவதாக தெரிய வருகிறது. இது வருந்தத்தக்கதாகும்.

தொடர்புடைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மனுதாரர்களிடம் இருந்து கோரிக்கை பெறும் அன்றே தொடர்புடைய பள்ளிகளில் உரிய பணியை மேற்கொள்ள அனுமதி ஆணை வழங்க வேண்டும். பொதுப் பணித்துறையின் கட்டுமான விதிமுறைகள் மற்றும் தர நிர்ணயங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திறன் வகுப்பறைகள், திறன்மிகு பலகைகள் உள்ளிட்ட பள்ளிக்கு தேவையானவற்றை மனுதாரர்கள் மூலம் பள்ளிக்கு வழங்கப்படும் நேர்வில், அவைகளை உரிய பதிவேட்டில் பதிவு செய்து மனுதாரர்களுக்கு பொருட்கள் பெறப்படும் அன்றே ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் பள்ளி உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பொருட்டு தொகையாக வழங்கப்படும் நேர்வுகளில் இதற்கென முதன்மைக் கல்வி அலுவலரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் பெறப்படும் தொகையை வரவு வைப்பதுடன், உடனடியாக தேவைப்படும் பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அப்பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பள்ளிக்கு தேவையான கழிவறை கட்டுதல் மற்றும் பராமரிப்பு, குடிநீர் சீர் செய்தல், வகுப்பறை மராமத்து பணிகள் உள்ளிட்ட பணிகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிறைவு செய்திடும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இப்பொருள் சார்ந்து பெறப்படும் நிதியை கொண்டு பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த அறிக்கை மற்றும் உரிய புகைப்படத்துடன் இஎம்ஐஎஸ் பதிவேற்றம் செய்ய வேண்டும். பணிகள் நிறைவடைந்தவுடன் அறிக்கையாக சட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுமதி அளிப்பதில் எவ்வித காலதாமதமும் இன்றி கோரிக்கை பெறப்படும் நாள் அன்றே அனுமதி வழங்கி பணிகள் நன்முறையில் நிறைவு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தவறின் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இச்செயல்முறைகளை பெற்றுக் கொண்டமைக்கு உரிய ஒப்புதல் அளித்திடவும், சார்நிலை அலுவலர்கள் அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் இத்தகவலை தெரிவித்து உயர் நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் மனுதாரர்கள் பள்ளியை, அலுவலர்களை அணுகும் போது அன்றே உரிய அனுமதி ஆணை வழங்கி தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.