17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்
புதுடெல்லி,ஜூன் 4: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ்பாகெல் போட்டியிடும் தொகுதியில் உள்ள மின்னணு எந்திரங்கள் மாறியிருப்பதாக அவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ராஜ்நந்த்கான் தொகுதியில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். இந்த நிலையில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்திய மின்னணு எந்திரத்திற்கும், 17 சியில் வழங்கிய மின்னணு எந்திரத்திற்கும் வேறுபாடு இருப்பதாக அவர் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பான பட்டியலையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பூபேஷ் பாகெல் கூறியிருப்பதாவது: தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்களின் எண்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது.
இதில் வாக்குப்பதிவு அலகு, கட்டுப்பாட்டு அலகு மற்றும் விவிபேட் ஆகியவை அடங்கும்.எனது தொகுதியான ராஜ்நந்த்கானில் வாக்குப்பதிவுக்குப் பிறகு படிவம் 17சியில் கொடுக்கப்பட்ட தகவலின்படி, பல மின்னணு எந்திரங்களின் எண்கள் மாறிவிட்டன. எண்கள் மாற்றப்பட்ட சாவடிகள் ஆயிரக்கணக்கான வாக்குகளைப் பாதிக்கின்றன. இதேபோன்ற புகார்கள் பல மக்களவை தொகுதிகளில் இருந்தும் வந்துள்ளன. மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். எந்தச் சூழ்நிலையில் இயந்திரங்கள் மாற்றப்பட்டன, தேர்தல் முடிவில் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு?. மாற்றப்பட்ட எண்களின் பட்டியல் மிக நீளமானது. ஆனால் உங்கள் பார்வைக்காக ஒரு சிறிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.