சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்ததால் அனைத்து காய்கறிகளின் விலையும் இருமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து 650 லாரிகள் மூலமாக 7 ஆயிரம் டன் காய்கறிகள் தினமும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய மார்க்கெட்டுகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகிறது.
இதுதவிர சில்லரை வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக வரும் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்ததால் அனைத்து வகையான காய்கறிகளின் விலையும் இருமடங்கு உயர்ந்துள்ளது. நேற்று காலை 480 லாரிகளில் 5,500 டன்னுக்கும் குறைவான காய்கறிகளே வந்ததால் திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனையான தக்காளி ரூ.80க்கும், ரூ.25க்கு விற்பனையான பெரிய வெங்காயம் ரூ.50க்கும், பீன்ஸ் ரூ.180, கேரட், பீட்ரூட் ஆகியவை ரூ.60க்கும், சவ்சவ், வெண்டை, அவரை ஆகியவை ரூ.50க்கும், கத்தரிக்காய், சுரைக்காய், நூக்கல் ஆகியவை ரூ.35க்கும், முள்ளங்கி, காளிபிளவர் ரூ.40க்கும், முட்டைகோஸ், புடலங்காய், கொத்தவரை ரூ.30க்கும், காராமணி ரூ.80, பாகல் ரூ.50, சேனைக்கிழங்கு ரூ.75, முருங்கைக்காய் ரூ.90, பச்சை மிளகாய் ரூ.60, பட்டாணி ரூ.210, பீர்க்கன் ரூ.70, எலுமிச்சை ரூ.130 என இருமடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வால் சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் கலக்கம் அடைந்தனர்.