Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழவேற்காடு கடற்கரையில் தேங்கியுள்ள மீன்கழிவுகளால் நோய்தொற்று அபாயம்: அகற்றி சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி: பழவேற்காடு கடற்கரை பகுதியில் தேங்கி கிடக்கும் மீன் மற்றும் குப்பைக் கழிவுகளால் பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. அவற்றை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மீன் மார்க்கெட் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அகற்றி சீரமைக்க வலியுறுத்தினர். பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரி, இந்தியாவின் மிகப்பெரிய 2வது உவர்ப்பு நீர் ஏரியாகும். இப்பகுதியை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான மீனவர்கள், ஏரி மற்றும் கடலில் இறால், நண்டு மற்றும் மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பழவேற்காட்டில் கடலும் ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்கு சென்றும் ஏரி மற்றும் கடலில் சுழற்சி முறையில் மீன்பிடித்து வருகின்றனர் இங்கு நாள்தோறும் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருவதால், அவர்கள் பிடித்து வரும் மீன்களை ஐஸ்கட்டிகள் வைத்து பதப்படுத்தப்படாமல் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இறால், நண்டு, மீன்களின் விலை மிகவும் குறைவாக காணப்படுவதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பழவேற்காட்டுக்கு வந்து அதிகளவில் இறால், மீன், நண்டுகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும், சுற்றுலா தலமாக பழவேற்காடு விளங்கி வருவதால் தற்போது ஏராளமான மக்கள் பல்வேறு வாகனங்களில் வருகை தருகின்றனர். இதற்கிடையே பழவேற்காடு மீன்பிடி இறங்குதளம் ஏரி அருகே கடந்த சில மாதங்களாக அதிகளவு கொட்டப்பட்ட மீன் மற்றும் குப்பைக் கழிவுகள் மலைபோல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் அங்குள்ள மீன் ஏலக்கூடத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்பட பலருக்கு, அங்கு குட்டைநீரில் தேங்கி நிற்கும் மீன்கழிவுகளால் பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை நீடிக்கிறது. மேலும், கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் பலர் மீன்களை இறக்கும்போது மீன்முள் குத்தி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இங்கு தேங்கியுள்ள மீன்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதில் அலட்சியமாக உள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பழவேற்காடு கடற்கரை மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மீன்கழிவுகளை உடனடியாக அகற்றி சீரமைக்க வலியுறுத்தி, நேற்று 50க்கும் மேற்பட்ட மீன் மார்க்கெட் வியாபாரிகள் திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, மீன் வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அங்கு தேங்கி கிடக்கும் மீன்கழிவுகளை உடனடியாக அகற்றி, அங்கு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மீன் வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.