Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் எதிரொலி பாகிஸ்தானில் தீவிரமடையும் கால்வாய் திட்ட போராட்டம்

லாகூர்: சிந்து நதிநீர் ஒப்பந்தம் இடை நிறுத்தம் எதிரொலியாக, பாகிஸ்தானில் சிந்து நதிநீர் கால்வாய் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து நதி நீர் கால்வாய் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களுக்கு இடையேயான நீர் பகிர்வு குறித்து நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால் அடிக்கடி போராட்டங்களும் நடைபெறுகின்றன.

குறிப்பாக 1991 நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்திற்கு பிறகு, சிந்து மாகாணம் தனது நியாயமான நீர் பங்கு மறுக்கப்படுவதாகவும், பஞ்சாபின் ஆதிக்கம் காரணமாக பாகுபாடு காட்டப்படுவதாகவும் புகார் செய்து வருகிறது. கடந்த 2024 ஏப்ரலில், பாகிஸ்தான் அரசு கிரீன் பாகிஸ்தான் முன்முயற்சியின் கீழ் ஆறு கால்வாய்களை அறிவித்தது. இதில் சோலிஸ்தான் கால்வாய் திட்டம் சிந்து மாகாணத்தில் கடும் எதிர்ப்பைத் தூண்டியது.

ஏனெனில் இது சிந்து நதியிலிருந்து நீரைத் திருப்பிவிடும் என்று உள்ளூர் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அஞ்சினர். தற்போது கடந்த மே மாதத்தில், சிந்து நதிநீர் கால்வாய் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. கடந்த மே 20ம் தேதி, மோரோவில் சிந்து சபா கட்சி தலைமையில் நடந்த போராட்டத்தில், காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிந்து உள்துறை அமைச்சர் ஜியாவுல் ஹசன் லஞ்சாரின் வீட்டைத் தாக்கி, எண்ணெய் டேங்கர்களை எரித்தனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசு இடைநிறுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறை மோசமடையும் என்ற அச்சம் நிலவுகிறது. அதனால் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.