துபாய்: ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் 7வது லீக் ஆட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்ததால், ஏ பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டிய கட்டாயத்துடன் இந்தியா இன்று களமிறங்குகிறது. அதே சமயம், ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் இலங்கையை வீழ்த்தியதால் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளது.
முதல் போட்டியில் ஏமாற்றமளித்த மந்தானா, ஹர்மன், ஜெமீமா, ரிச்சா, பூஜா, ஷபாலி சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். புள்ளிக் கணக்கை தொடங்க பாகிஸ்தானை வீழ்த்தியாக வேண்டும் என்பதால் இந்திய அணி மாற்றத்துடன் மட்டுமின்றி, கூடுதல் வேகத்துடன் களமிறங்க வேண்டியது அவசியம். இருதரப்பு தொடர்களில் விளையாடாத இந்த அணிகள்... ஆசிய கோப்பை, உலக கோப்பை போட்டிகளில் மட்டுமே சந்தித்துள்ளன. அவற்றில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது என்றாலும், இன்றைய போட்டி சவால் மிகுந்ததாகவே இருக்கும்.