இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் 2வது இன்னிங்சிலும் இந்தியா ரன் குவிப்பு: ராகுல், பண்ட் அதிரடி சதம்
லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், நேற்று 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 83 ஓவர் முடிவில் , 4 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கடந்த 20ம் தேதி துவங்கிய முதல் டெஸ்டில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 465 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. அதையடுத்து, 3ம் நாள் பிற்பகுதியில் 2வது இன்னிங்சை இந்தியா தொடர்ந்தது. ஆட்ட நேர இறுதியில், இந்திய அணி 2 விக்கெட் இழந்து 90 ரன் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து, 4ம் நாளான நேற்று இந்திய வீரர்கள் சுப்மன் கில், கே.எல். ராகுல் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில், பிரைடன் கார்ஸ் வீசிய பந்தில் சுப்மன் கில் (8 ரன்) கிளீன் போல்டாகி வெளியேறினார். அதையடுத்து, ராகுலுடன், விக்கெட் கீப்பரும் துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் இணை சேர்ந்தார்.
இவர்களது சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி உணவு இடைவேளையின்போது, 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்திருந்தது. அதன் பின் மீண்டும் ஆட்டத்தை துவக்கிய அவர்கள் அதிரடி ரன் குவிப்பை அரங்கேற்றினர். ராகுல், 202 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் முதலில் சதத்தை எட்டினார். சிறிது நேரத்தில் ரிஷப் பண்டும், 130 பந்துகளில் சதத்தை எட்டிப் பிடித்தார். ஏற்கனவே முதல் இன்னிங்சில் சதம் விளாசியிருந்த அவர் 2வது இன்னிங்சிலும் சதம் விளாசி சாதனை படைத்தார். இந்த இணை, 4வது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்திருந்த நிலையில், ஷொயப் பஷீர் பந்தில், பண்ட் (140 பந்து, 3 சிக்சர், 15 பவுண்டரி, 118 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின் கருண் நாயர் களமிறங்கினார். 83 ஓவர் முடிவில் இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்திருந்தது. ராகுல் 133, கருண் நாயர் 18 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.


