கோவை: பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: பாகிஸ்தான், இந்தியாவுடன் நேரடியாக மோதாமல் பயங்கரவாதிகளை ஏவிவிட்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால், இந்தியாவில் இருக்கும் பாஜ எதிர்ப்பாளர்கள், பாஜவையும், பிரதமர் மோடியையும் எதிர்ப்பதாக நினைத்து கொண்டு, இந்தியாவையும், இந்திய ராணுவத்தையும் அவமதித்து கொண்டிருக்கிறார்கள். இந்திய ராணுவம் உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும் போது, அதனை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருப்பதை ஏற்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா எப்போதும் போரை விரும்பியது இல்லை. அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க, எதிர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. 140 கோடி மக்களை காக்க இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் உயிரை பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அரசியல், மதம், சாதி, மொழி, இனம் என அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Advertisement