புதுடெல்லி: அமெரிக்காவில் விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்கு சென்ற இந்திய மாணவியின் குடும்பத்தினர் உடனடியாக அமெரிக்கா செல்ல அவசரகால விசா வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. இதற்கு உதவிய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு மாணவியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலம் ஷிண்டே (35). இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தங்கிப் படித்து வருகிறார்.
கடந்த 14ம் தேதி நீலம் நடந்து சென்ற போது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார். நீலமின் தாய் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இதனால் அவரது தந்தையும் சகோதாரரும் உடனடியாக அமெரிக்கா செல்ல முயன்றனர். ஆனால் அவர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் நிலவியது. இந்த தகவல் குறித்து அறிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சுலே, நீலம் குடும்பத்திற்கு உதவுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இணைந்த எடுத்த நடவடிக்கை மூலம் நீலம் குடும்பத்தினருக்கு அமெரிக்கா செல்ல அவசரகால விசா வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. இதற்காக இன்டர்வியூக்கு இன்று அவர்கள் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக நீலம் குடும்பத்தினர் ஒன்றிய, மாநில அரசுக்கும் எம்பி சுப்ரியா சுலேவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.